தேர்தலில் வன்முறைகள் இடம்பெறக்கூடிய மாவட்டங்களில் வடக்கில் யாழ் மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக ‘சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே கஃபே அமைப்பின் பணிப்பாளர் அகமட் மனாப் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்ற இந்த சந்தர்ப்பத்தில் அமைதியான தேர்தலுக்காக ஒன்றுபடுவோம் என்ற நோக்கில் கிராமத்திற்கு கிராமம் என்ற வேலைத்திட்டத்தை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம்.
அந்தவகையில் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் ‘கஃபே’ அமைப்பிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.ஒரே கட்சியில் போட்டியிடும் அபேட்சகர்களிற்கு எதிராக வெறுப்பூட்டத்தக்கதான பிரச்சாரங்கள் அதிகரித்துள்ளதுடன்.
பொய்யான பிரச்சாரங்களும் அதிகளவில் பரப்பப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கபெற்றிருக்கின்றது. எனவே வெறுப்பூட்டதக்க பிரச்சாரங்கள் அதிகரிக்கும் போது வன்முறைகளும் அதிகரிக்கும் என தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெளிவூட்டல்களை நாம் வழங்கியிருக்கிறோம்.
அந்த வகையில் வன்முறைகள் அதிகரித்த சில பகுதிகளை பொலிஸ் திணைக்களத்திற்கு அடையாளப்படுத்தியுள்ளோம். வன்னி மாவட்டத்தில் வவுனியா தொகுதியில் முறைப்பாடுகள் மிகவும் குறைவான நிலையில் காணப்படுகின்றமை பாராட்டத்தக்க விடயமாக இருக்கிறது. மன்னார் மாவட்டத்தில் வெறுப்பூட்டத்தக்க பேச்சுக்கள் மற்றும் பொய்யான பிரச்சாரங்கள் போன்ற முறைப்பாடுகள் அதிகளவில் கிடைத்துள்ளது.
குறிப்பாக கட்சிகளின் ஆதரவாளர்களே அதிகளவில் வன்முறையில் ஈடுபடுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அரசியல் வாதிகள் ஒன்றாகவே பயணிக்கிறார்கள். அதுபோல ஆதரவாளர்களும் ஒன்றாக பயணிக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
குறிப்பாக பொத்துவில், அக்கரைப்பற்று, சாய்ந்தமருது பிரதேசங்கள் வன்முறைகள் அதிகமாக இடம்பெறும் பகுதியாக எம்மால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன். காத்தான்குடி, ஏறாவூர், கிண்ணியா, புல்மோட்டை மற்றும் வடக்கில் யாழ் மாவட்டம் போன்ற பகுதிகள் வன்முறைகள் தொடர்பாக முன்னிலையான இடத்தை பெறுகின்றது. வடகிழக்கிற்கு அப்பால் குருநாகல், மதுகம, தங்கல்ல போன்ற பகுதிகளை நாம் அடையாளப்படுத்தியுள்ளோம்.
இந்த சந்தர்ப்பத்தில் வன்முறையில் ஈடுபடாமல் அமைதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு அனைவரும் ஒன்றுபடுவோம் என்ற அழைப்பை விடுக்கின்றேன்.
முக்கியமாக வாக்களிப்பு தினத்தில் அதன் விகிதாசாரம் அதிகரிக்குமா என்பது சவாலான விடயம். கொவிட்-19 வைரஸ் தாக்தகத்தின் இரண்டாம் அலையே இதற்கான முக்கிய காரணியாக இருக்கிறது. இம்முறை தபால் மூல வாக்களிப்பானது என்றுமில்லாத வகையில் குறைவடைந்திருக்கின்றது. எனவே வாக்களிப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு பல நிகழ்சித்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றது.
வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி சுகாதார நடைமுறைகளை பேணுவதுடன் சமூக இடைவெளியை மக்கள் பின்பற்ற வேண்டும்.என்று தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிடுகின்றது. வாக்களிப்பை அதிகரிக்கும் விதமாகபல்வேறு நடவடிக்கைகளை ‘கபே’
அமைப்பும் முன்னெடுத்துவருகின்றது.
இலங்கையை பொறுத்தவரை அரசுகள் தமக்கு தேவையான நேரங்களிலேயே தேர்தலை நடாத்தும் நிலமைகள் ஏற்பட்டிருந்தது. அந்தவகையில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைவடைவதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் தேவையாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எதிர்வு கூறுகின்றது.
எனவே சட்டம் இயற்றும் நாடாளுமன்றம் இல்லாமல் இந்த நாட்டிலே மக்கள் பயணிக்க முடியாது. எனவே தான் அதிமான நிதியை செலவளித்து வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி இந்த தேர்தலை தேர்தல்கள்ஆணைக்குழு நடாத்துகின்றது. எனவே சவாலுக்கு மத்தியில் இந்த தேர்தலை எதிர்கொள்ளவேண்டிய நிலையில் நாட்டு மக்கள் இருக்கின்றார்கள்” என தெரிவித்தார்.