குருபரன் மீதான தடையை உடன் நீக்குங்கள்; மானியங்கள் ஆணைக் குழுவை கோரும் தமிழ் சிவில் சமூக அமையம்

345 0

கலாநிதி குமரவடிவேல் குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடையை உடனடியாக நீக்குமாறு பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவை தமிழ் சிவில் சமூக அமையம் வலியுறுத்திக் கோரியுள்ளது.

இது தொடர்பில் செயலாளர் அ.கஜேந்திரன் மற்றும் பேச்சாளர் வி.யோகேஸ்வரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் விபரம் வருமாறு;

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகச் சட்டத்துறைத் முதுநிலை விரிவுரையாளர், சட்டத்தரணி, கலாநிதி குமரவடிவேல் குருபரன் அவர்கள் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையாகி வாதாடுவதற்கு, பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கலாநிதி குருபரன் அவர்கள் சட்டத்தரணியாக செயற்படுவதற்குரிய தமது உரிமையை நிலைநாட்ட உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இவ்வழக்கு விசாரணை தொடர்ச்சியாக பிற்போடப்படும் நிலையில் பிந்திய முடிவாக இவர் தமது சட்டத்துறை விரிவுரையாளர் நிலையை இராஜினாமா செய்துள்ளார்.

பல்கலைக் கழகங்களிற்கான தாபனக் கோவையின், எட்டாவது அத்தியாயத்தின் கீழ், நீதி மன்ற வழக்குகளில் முன்னிலையாகி வாதாடுவதற்கான அனுமதியை முறையாகப் பெற்று, 2011ம் ஆண்டு முதல் கலாநிதி குருபரன் அவர்கள் பல்வேறு பொது நல வழக்குகளில் வாதாடி, நீதி நிலை நிறுத்தப் படுவதற்குத் துணையாக இருந்து வந்துள்ளார்.

இந்த வகையில், 1996ம் ஆண்டு, ஜூலை மாதம் 19ம் திகதி நாவற்குழி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரால் கைது செய்யப் பட்டுக் காணாமல் ஆக்கப் பட்ட 24 இளைஞர்களில் மூவரினது உறவினர்கள் தொடுத்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் அவர் வாதாடி வந்தார். இதனால் அதிருப்தியடைந்த இலங்கை இராணுவத்தின் தலைமைப் பீடம் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினூடாக இத் தடையை ஏற்படுத்தியுள்ளனர்.

நீதி நிலை நிறுத்தப் படுவதற்கான முறைமையின் மீதும், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையின் மீதும் மேற்கொள்ளப் பட்டுள்ள மிக மோசமானதும், கீழ்த்தரமானதுமான தாக்குதலாகவே இத் தடையை நாம் நோக்குகிறோம்.

1. பல்கலைக் கழகங்களில் நடப்பிலுள்ள தாபன விதிக் கோவையின் விதி முறைகளுக்கமைவாக முறையான அனுமதி பெற்ற பின்னரே கலாநிதி குருபரன் அவர்கள் நீதி மன்ற வழக்குகளில் முன்னிலையாகி வாதாடி வருகிறார். எனவே ஏற்றுக் கொள்ளப் பட்ட விதிமுறைகளுக்கமைவாக வழங்கப்பட்ட அனுமதியை, இத் தடை எதேச்சாதிகாரமான முறையில் மறுதலிக்கிறது. இது அநீதியானது.

2. பிரயோகம் சார்ந்த, தொழில் வாண்மைக் கற்கை நெறிகளில், கற்பிப்பவர்கள் நேரடியான பிரயோக அனுபவத்தைத் தொடர்ச்சியாகப் பெறுவதை உறுதிப் படுத்தி, அதனூடாகக் கற்பித்தற் தரத்தை மேலும் செழுமையடையச் செய்யலாம் என்ற அடிப்படையில் உலகாளாவிய ரீதியில் பல்கலைக் கழகங்கள் இவ்வாறான நடை முறையினை ஊக்குவித்து வருகின்றன. இவ்வகையில், மருத்துவத் துறை, பொறியியற் துறை, சட்டத் துறை போன்ற இன்னோரன்ன துறைகளில், கற்பிப்பதற்கு மேலாக தத் தம் துறைகளில் பிரயோக நிலைத் தொழிற்பாடுகளில் ஈடுபடுவது அங்கிகரிக்கப் பட்ட நடைமுறையகவே இருந்து வருகிறது. இவ்வாறான நடைமுறையின் மீதான தடை வழமைக்கு மாறானதொன்று.

3. பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு உறுதுணையாக விளங்கவல்ல தரமான சட்ட உதவியினைத் தடுப்பதனூடாக நீதி வழங்கலைத் தடுப்பதையும், அதன் வழி குற்றம் புரிந்தோரைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டே இத் தடை ஏற்படுத்தப் பட்டுள்ளது. தமது குற்றமற்ற தன்மையை நிஷரூபிக்கத் தேவையான உச்ச கட்ட சட்ட நிபுணத்துவம் சட்ட மா அதிபர் திணைக்களத்தினூடாக இலங்கை இராணுவத்திற்குக் கிடைத்து வருகிறது. அதன் வழி தமது நியாயத் தன்மைகளை நிஷரூபிப்பதை விடுத்து, சாதாரண குடிமக்களுக்குக் கிடைக்கக் கூடிய சட்ட உதவிகளைத் தடுப்பதனூடாக தமது நலன்களைப் பாதுகாக்க விழையும் கயமைத்தனமான செயற்பாட்டினையே இலங்கை இராணுவம் முன்னெடுத்து வருகிறது. பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவும் இந்த நடவடிக்கைக்கு ஒத்திசைவாக நடந்து கொண்டிருப்பதன் மூலம், சிங்கள-பௌத்தப் பேரினவாத மனநிலை கொண்ட பல்வேறு பொது நிறுவனங்களில் தமதும் ஒன்று என்பதை நிஷரூபித்துள்ளது.

4. மீள நிகழாமை மற்றும் பொறுப்புக் கூறலுக்கான பொறிமுறை உள்ளகப் பொறிமுறையாக இருக்க முடியாது என்பதற்கான நிதர்சனமான உதாரணமாகவும் இத்தடை முயற்சி விளங்குகிறது. அதியுயர் கல்விசார் விழுமியங்களைப் பேண வேண்டிய பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு உட்பட, அனைத்து நிறுவனங்களும் கூர்மையான இனத்துவச் சார்பு நிலை கொண்டுள்ளமையையும், நீதி வழுவா நெறிமுறை இங்கு இல்லை என்பதையும் இச் சம்பவம் மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

5. அவர் தொடுத்திருந்த வழக்கில் அவருக்கெதிரான மேலதிக சான்றுகளாக அடையாளம் கொள்கை ஆய்வு மன்ற அறிக்கைகளும் தமிழ் சிவில் சமூக அறிக்கைகளும் இணைக்கப்பட்டருப்பது. இந்நடவடிக்கையின் பின்னால் உள்ள இராணுவ அரசியல் நோக்கங்களை தெளிவு படுத்தியுள்ளது.

6. இத்தகைய உள்நோக்கம் கொண்ட பலகலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒரு அறிவுறுத்தலை யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை போதிய உசாவுதல் இன்றி அவசர அவசரமாக நடைமுறைப்படுத்த முன்வந்தமை அது இவ்விடயத்தில் சுதந்திரமாக முடிவெடுக்கும் தனக்குரிய சுயாதீனத்தை இழக்கும் அவல நிலைக்கு அதனைத் தள்ளியுள்ளது

இதனடிப்படையில்,

1. இத் தடைக்கு எதிராக சகல வழிகளிலும் ஒன்றிணைந்து குரல் கொடுக்குமாறு அனைத்து மக்களையும், பொது அமைப்புகளையும் வேண்டுகிறோம்.

2. இத் தடையை நீக்குவதற்கு ஏதுவான அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறு இராஜதந்திரத் தரப்பினரையும், சட்டத் துறையைச் சார்ந்தவர்களையும் வேண்டுகிறோம்.

3. தனக்குரிய சுயாதீனத்தை துணிவோடு பயன்படுத்தி கலாநிதி குருபரனுக்குரிய உரிமையை உரிய முறையில் நிலைநாட்டுவதன் மூலம் தனது கௌரவத்தை பேணிக்கொள்ள முன்வர வேண்டுமென்று யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவையை பற்றுரிமையோடு கோருகின்றோம்.

4. இத் தடையை உடனடியாக நீக்குமாறு பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவைக் கோருகிறோம்