கதிர்காமத்தில் 17 வருடங்களுக்குப் பின்னர் நிறுத்தப்பட்ட அன்னதானம்

277 0

கதிர்காம ஆடிவேல் விழாவையொட்டி கடந்த 17 வருட காலமாக நடாத்திவந்த அன்னதானம் இம்முறை நிறுத்தப்பட்டுள்ளதாக அன்னதான சபையின் இணைப்பாளர் எஸ்.ஞானசுந்தரம் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்

கடந்த 17 வருடகாலமாக இந்து கலாசார திணைக்களத்தின் கதிர்காம இந்துயாத்திரிகர் விடுதியில் சிவபூமி அன்னதான தொண்டர் சபையினரால் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றுவந்ததோடு, அதில் பல இலட்சக்கணக்கான பக்த அடியார்கள் பசியாறிவந்தனர். ஆனால் இம்முறை அதனை நடாத்தக்கூடிய சூழ்நிலை இல்லை என்பதால், அதனை நிறுத்துவதற்கு தீர்மானித்ததாக இணைப்பாளர் எஸ்.ஞானசுந்தரம் தெரிவித்தார்.

இதேவேளை, இந்து யாத்திரீகர் விடுதியும் இம்முறை பக்தர்களுக்கு அல்லாமல் கொரோனாத் தடுப்பு அலுவலர்கள் தங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல் கதிர்காமம் மற்றும் உகந்தமலைமுருகனாலய ஆடிவேல் விழாக்காலங்களில் மேற்கொள்ளப்படும் வழமையான விசேட போக்குவரத்து ஒழுங்குகள் நாட்டின் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மேற்கொள்ளப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.