சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி திறப்பு

510 0
 சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிளாஸ்மா வங்கி திறப்பு.
கொரோனாவில் இருந்து குணமடைந்த ஒருவரின் ரத்தத்தில் இருந்து ‘பிளாஸ்மா’வை பிரித்து, அதனை பாதிக்கப்பட்ட மற்றொருவர் உடலில் செலுத்தி அளிக்கப்படும் சிகிச்சை நல்ல பலன் அளிக்கிறது. இந்த ‘பிளாஸ்மா’ சிகிச்சை முறையில் 20 பேரில் 18 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதையடுத்து தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ‘பிளாஸ்மா’ வங்கி அமைப்பதற்காக ரூ.2.50 கோடி செலவில் நவீன கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் அங்கு ஒரே நேரத்தில் 7 பேர் வரை ‘பிளாஸ்மா’ தானம் அளிக்கலாம். கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த 18 வயது முதல் 65 வயது வரை உடையவர்கள் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்ட 14 நாள்களுக்கு பின்பு பிளாஸ்மா தானம் செய்ய முடியும்.

சென்னையில் ஸ்டான்லி மற்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், திருச்சி, சேலம், நெல்லை, கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் விரைவில் ‘பிளாஸ்மா’ சிகிச்சை தொடங்கப்படும் என்று அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிளாஸ்மா வங்கி இன்று திறக்கப்பட்டுள்ளது.  ரூ.2 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட பிளாஸ்மா வங்கியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.   திறப்பு விழாவின் போது அமைச்சர்கள், மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவிலேயே டெல்லிக்கு அடுத்தபடியாக 2ஆவதாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்  பிளாஸ்மா வங்கி திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா நோயாளிக்கு சிகிச்சை தர ஒரே நேரத்தில் 7 பேரிடம் இருந்து பிளாஸ்மா செல்களை பிரித்தெடுக்க முடியும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் ஒருவரிடம் இருந்து பிளாஸ்மா செல்களை எடுக்க குறைந்தது 40 நிமிடங்கள் வரை ஆகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.