கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர்களிடம் இருந்து இதுவரை ரூ.394.14 கோடி நிதி சேர்ந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொரோனா நிவாரண நிதிக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிதி உதவி வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிக்கு பொதுமக்களும் தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கும்படி தமிழக அரசு அறிவித்திருந்தது. முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மக்கள் மனமுவந்து நிதியுதவி அளிக்க வேண்டும். மக்கள் அளிக்கும் நன்கொடைக்கு வருமான வரி சட்டப்பிரிவு 80ஜி-யின் கீழ் 100 சதவீத வரிவிலக்கு உண்டு என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொரோனா நிவாரண நிதி தொடர்பான தகவல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர்களிடம் இருந்து இதுவரை ரூ.394.14 கோடி நிதி சேர்ந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜுலை 21 ம் தேதி வரை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகளின் சார்பாக ரூ.394.14 கோடி நிதி வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.