நிழல் அரசின் மிக முக்கியமான பொறுப்பு வகித்த ரூபனை பாராளுமன்றம் அனுப்பி திருமலையை காப்பாற்றுங்கள்

399 0

ஒரு நிழல் அரசின் மிக முக்கியமான பதவிகள் பொறுப்புக்களை வகித்து சாதனைகள் பலவற்றை செய்த விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன்) பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்து திருகோணமலை மாவட்டத்தை காப்பாற்றுமாறு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன் திருகோணமலை மாவட்ட மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் கருத்துப் பரப்புரைக் கூட்டம் திருகோணமலை நகரத்தில், 3ம் கட்டையடியில் நேற்று புதன்கிழமை நடைபெற்றபோது இந்த வேண்டுகோளை விடுத்த நீதியரசர் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களின் போராட்ட வடிவம் தான் மாற்றம்பெற்றது என்றும் ஆனால் கடந்த 10 வருடங்களில் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு 70 வருட கால தமிழ் மக்களின் போராடத்தையே முடிவுக்கு கொண்டுவரும்வகையில் செயற்பட்டிருக்கின்றது என்றும் குற்றம் சாட்டினார்.

“அவர் ஒரு செயல் வீரர். ஆகவே எனது அன்புக்குரிய திருகோணமலை மக்களே! ரூபன் உங்களுக்கு கிடைத்துள்ள அரிய ஒரு வாய்ப்பு. அதனை இழந்துவிடாதீர்கள். அவருக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கிப் பாருங்கள். நீங்கள் ஏமாறமாட்டீர்கள் ” என்றும் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்,

எங்கள் கட்சியில் போட்டியிடும் ரூபன் அவர்கள் சம்பந்தன் ஐயா தேர்தலில் தோற்றபோது அவர் மீண்டும் வெற்றி பெறச் செய்வதற்கு விசேடமாகத் தம்பியால் திருகோணமலைக்கு அனுப்பப்பட்டவர். அவர் இங்கு வந்து திரு.சம்பந்தன் ஐயாவை அடுத்த தேர்தலில் வெற்றி பெறச்செய்தவர். இன்று அவ்வாறான ரூபன் வெற்றி பெறச் செய்ய நீங்கள் யாவரும் கடமைப்பட்டவர்கள்.

முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான எமது இளைஞர், யுவதிகள் மற்றும் பொதுமக்களின் செங்குருதியில் உருவாக்கப்பட்ட இனவழிப்புக்கான பரிகார நீதி எனும் பொறிமுறையை சமயோசிதமாகக் கையாண்டு எமக்கான நீதியைப் பெற்றுத்தருவதாகக் கூறித்தான் கடந்த எல்லா தேர்தல்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்குகளைக் கேட்டிருந்தது. இதனை நம்பித்தான் எமது மக்களும் கடந்த எல்லா தேர்தல்களிலும் பெருவாரியாகத் திரண்டு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து பாராளுமன்றத்துக்கு அனுப்பியிருந்தார்கள். ஆனால், அவர்களோ அற்ப சலுகைகளுக்காகவும் பதவிகளுக்காகவும் இனப்படுகொலை செய்தவர்களை சுற்றவாளிகளாக்கி பிணை எடுத்து நயவஞ்சகமாக எமது மக்களை ஏமாற்றியுள்ளார்கள். ரணிலின் நரித்தந்திரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வைத்தே முள்ளிவாய்க்காலுக்கான பரிகார நீதியை நீர்த்துபோக வைத்துள்ளது. அவரின் சூட்சிக்கு எம்மவர்கள் பலியாகினார்கள்.

எமது போராட்ட வடிவமே முள்ளிவாய்க்காலினால் மாற்றம் பெற்றுள்ளது. இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுயநல அரசியல் செயற்பாடுகளினால் எமது 70 வருட கால போராட்டமே தோற்கடிக்கப்பட்டுவிடும் ஆபத்தில் இருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்ரிபால சிறிசேன ஆகியோரால் தாம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுவது கூட்டமைப்புக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ஆனால், பதவிகளும் சலுகைகளும் அவர்களை அரசாங்கத்தில் இருந்து விடுபட்டு வெளியேறி சுயாதீனமாகச் செயற்படுவதற்கு இடமளிக்கவில்லை. நான் தொடர்ந்தும் கூட்டமைப்புடன் இருந்திருந்தால் பெருந் தவறை எமது மக்களுக்கு இழைத்திருந்திருப்பேன். எமது மக்களுக்கு எதிரான ஆபத்துக்களை எல்லாம் உணர்ந்துதான் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது.

ஓரிருவர் தாம் நினைத்தபடி தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப முடிவுகளை எடுத்து எமது மக்களின் பிரச்சினைகள், உரிமைகள் தொடர்பில் செயற்பட முடியாது. அதனால்த்தான் நிலத்திலும் புலத்திலும் உள்ள எமது புத்திஜீவிகளை உள்வாங்கி நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளை நாம் முன்னெடுக்கவேண்டும் என்று கூறிவருகின்றேன். இதுவே தமிழ்த் தேசியத்தைப் பாதுகாக்கும். இதற்கான ஒரு அடித்தளத்தை நான் இருக்கும் காலத்துக்குள் போட்டுவிட வேண்டும் என்பது எனது விருப்பம். தனி மனிதர்களின் வாழ்வு நிலைப்பதில்லை. ஆனால் நிறுவனங்கள் நிலைக்கும். அதேபோல, தனிமனித முடிவுகளை விட பல புத்திஜீவிகள் சேர்ந்து ஆராய்ந்து எடுக்கும் முடிவுகள் அறிவுபூர்வமானவை, பலமானவை. தனி மனிதனை இலகுவாக சலுகைகள் பதவிகளைக் காட்டி விலை கொடுத்து வாங்கிவிடலாம். ஆனால், நிறுவனங்களை அவ்வாறு வாங்க முடியாது.

எமது வரலாற்றை நோக்கினால் நாம் அறிவில் சிறந்தவர்களாக வீரத்துடன் இருந்ததனால் எதிரிகளால் இலகுவில் தோற்கடிக்கப்பட முடியாத பலம் பொருந்திய பேரரசுகளை கட்டி எழுப்பியிருந்தோம். ஆனால் காலப் போக்கில் எதிரிகள் எம் பலத்தை உணர்ந்தவர்களாக எம்மைத் தோற்கடிப்பதற்கு எம்மவர்களை வைத்தே எம்மை வீழ்த்தும் தந்திரத்தை பயன்படுத்த தொடங்கினர். இது துரதிஸ்டவசமாக இன்று வரை தொடர்வதனால் நாம் தொடர்ந்தும் வீழ்த்தப்பட்டு வருகின்றோம். இந்தவகையில் இறுதியாக நடந்த துரோகமே தமிழ் தேசியத்துக்காக உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் சர்வதேச பொறுப்புக் கூறலுக்கான எமது மக்களின் முயற்சிகளை காட்டிக் கொடுத்துள்ளமை ஆகும். ஐ. நா மனித உரிமைகள் சபையில் எமது மக்களின் கடும் முயற்சியினால் கொண்டுவரப்பட்ட அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானத்தினை நீர்த்துப்போக செய்து அரசாங்கம் தனது எந்தவிதமான கடப்பாடுகளையும் நிறைவேற்றாமல் அதில் இருந்து வெளியேறி செல்வதற்கு உடந்தையாக இருந்திருக்கின்றது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரின் கடந்த 10 வருடகால தேர்தல் விஞ்ஞாபனங்களை விரிவாக ஆராய்ந்து பார்ப்போமானால் இறுதிப் போரில் நடைபெற்ற போர்க்குற்றம் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றம் ஆகியவற்றுக்கான நீதி, சர்வதேச விசாரணை என்பவை தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். இதேவேளை செயற்ப்பாட்டில் இந்த விடயத்தில் அரசாங்கத்துக்கு சார்பாக அவர்கள் நடந்து கொண்டாலும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பெயருக்காவது இவற்றை குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால், இம்முறை விஞ்ஞாபனத்தில் இனப்படுகொலைக்கான நீதி, போர்க்குற்றம் என்பவை வலியுறுத்தப்படவில்லை. அதேவேளை, கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் கோத்தபாய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெறுவது குறித்து வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். இது எம் மக்களின் போராட்டத்தை எந்த இடத்துக்கு கூட்டமைப்பு கொண்டுவந்து விட்டிருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
அவர்களின் சொந்த தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே தாங்கள் கடந்தகாலத்தில் இலங்கையின் உள்ளக விசாரணையை நம்பி செயற்பட்டதாகவும் அது நடைபெறவில்லையென்றும் குறிப்பிட்டுள்ளார்கள். அப்படியானால், அதற்கு முன்னர் தேர்தல்களில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி எமது மக்களிடம் பெற்றுக்கொண்ட ஆணைக்கு முரணாக அவர்கள் இதுவரையில் செயற்பட்டுள்ளதாக அவர்களே ஒத்துக் கொண்டுள்ளனர். இது பெருந் துரோகமாகும்.

இதேபோலத்தான் ஒவ்வொரு முறையும் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இறைமை, சமஷ்டி , தமிழர் தாயகம் இணைந்த வட-கிழக்கு போன்ற கோரிக்கைகளை முன்வைப்பார்கள். ஆனால் கடந்த ஆட்சியில் நடைமுறைக்கு வராத ஒரு தீர்வுக்காக ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டார்கள்; பௌத்தத்துக்கு முன்னுரிமை கொடுப்பதை ஏற்றுக்கொண்டார்கள்; வட-கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்று கூறினார்கள். இம்முறை தேர்தல் விஞ்ஞாபனத்திலும் விரும்பியோ விரும்பாமலோ சமஷ்டி என்றும் வடக்கு- கிழக்கு இணைப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், அதேவேளை அமைச்சு பதவிகளை பெறப்போவதாக கூறுகின்றார்கள். இது அவர்களின் இரட்டை முகத்தைக் காட்டுகின்றது. அமைச்சுப் பதவிகளை பெற்று எவ்வாறு சமஷ்டி தீர்வினை ஏற்படுத்த முடியும் என்று கூட்டமைப்பு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

அன்பான திருகோணமலை மக்களே! வடக்கு -கிழக்கின் தலை நகரத்தின் நிலைமை எப்படி இருக்கிறது என்று பாருங்கள். நீங்கள் கடந்த காலங்களில் தெரிவுசெய்த பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் பலம்மிக்க எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பில் இருந்தபோதுதான் இங்கே எமது கோவில்கள் இடிக்கப்பட்டன. விகாரைகள் அமைக்கப்பட்டன. எமது நிலங்கள் பறிக்கப்பட்டன. சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டார்கள். இத்தனையும் நடைபெறும்போது அவர் இங்கு நின்றல்லவா போராடி இருந்திருக்க வேண்டும்? ஆனால், இத்தனையும் நடைபெற்றபோது அவரோ அரசாங்கம் வழங்கிய சொகுசு மாளிகையில் கொழும்பில் தூங்கிக்கொண்டிருந்தார். அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்துக்கொண்டிருந்தார்.

ஆகவே அன்பார்ந்த மக்களே! இம்முறை தீர்க்கமான ஒரு முடிவை எடுங்கள். உங்களுக்கு முன் இரண்டு தெரிவுகள் தான் இருக்கின்றன. உங்கள் கோவில்கள் இடிக்கப்பட்டு விகாரைகள் அமைக்கப்பட்டு எமது நிலங்களை அரசாங்கம் பறித்தபோது எதுவுமே தெரியாது போல அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்தவரா, அல்லது கடந்த காலத்தில் தனது உயிரைத் துச்சமாக மதித்து மக்களோடு மக்களாக நின்று இந்த அநீதிகளுக்கு எதிராக இரவும்பகலும் போராடிய எமது வேட்பாளாரான ரூபன் அவர்களா என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும். ரூபன், பாராளுமன்ற உறுப்பினர் ஆகினால், அவர் கொழும்பு சென்று ஆடம்பர அரச மாளிகையில் உறங்கமாட்டார். அவர் இங்கு உங்களோடு ஒருவராகத் தான் வாழ்வார். அவர் குடும்பம் இங்குதான் இருக்கின்றது. உங்கள் காணி அபகரிக்கப்படும் பொழுது அவர் தட்டிக்கேட்பார். உங்கள் கோவில் இடிக்கப்பட்டால் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்.

ரூபனின் ஆற்றல் மற்றும் செயற்பாடுகளை பற்றி நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை. ஒரு நிழல் அரசின் மிக முக்கியமான பதவிகள் பொறுப்புக்களை வகித்தவர். அவர் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். அவர் தன்னைப்பற்றி அதிகம் பேசிக்கொள்வதில்லை. அவர் கூறி அவரைப்பற்றி நான் அறிந்தவற்றைவிட பலர் அவரைப்பற்றி என்னிடம் கூறி இருக்கின்றார்கள். அவருடைய சில பேச்சுக்களை நான் கேட்டிருக்கின்றேன். எமது பிரச்சினைகள் மற்றும் அரசியல் வரலாறு பற்றி மிகவும் ஆழமான அறிவை அவர் கொண்டிருக்கின்றார். திருகோணமலையின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை அவர் அறிந்துவைத்திருக்கின்றார். அவற்றுக்கு எத்தகைய தீர்வுகள் அவசியம் அவற்றை எப்படி செய்யலாம் என்பதும் அவருக்கு தெரிந்திருக்கிறது. அவர் ஒரு செயல் வீரர். ஆகவே எனது அன்புக்குரிய திருகோணமலை மக்களே! ரூபன் உங்களுக்கு கிடைத்துள்ள அரிய ஒரு வாய்ப்பு. அதனை இழந்துவிடாதீர்கள். அவருக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கிப் பாருங்கள். நீங்கள் ஏமாறமாட்டீர்கள். அதேபோலத்தான் திருகோணமலையில் போட்டியிடும் எமது ஏனைய வேட்பாளர்களும். அவர்கள் ஆற்றல் மிக்கவர்கள். திருகோணமலையை காப்பாற்றுவதற்கு துடிப்பவர்கள்.

எமது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி எமது தமிழ் மக்களுள் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு சேவை செய்தவர்களையே பொதுவாக வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. திருகோணமலையில் நிறுத்தியிருக்கும் அனைவருமே சிறந்தவர்கள். மீன் சின்னத்திற்கு முதலில் புள்ளடி போட்டு அடுத்து முதலாவது வேட்பாளரான ரூபனுக்கு வாக்கிட்டு மேலும் இருவருக்கு ஆகஸ்ட் 5ந் திகதி வாக்கு அளியுங்கள். நேரத்திற்கே வாக்களிக்கச் செல்லுங்கள். மீனுக்கு வாக்களித்து ஒரு புதிய சிந்தனையை புதிய நடைமுறையை, புது முகங்களை திருமலை அரசியலில் கொண்டு வாருங்கள். அவர்களுடன் நாம் இணைந்து உங்கள் அனைவரதும் பிரச்சனைகளைத் தீர்க்க நாம் உதவி புரிவோம்.