வவுனியா வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
சுழற்சி முறையிலான போராட்டம் இன்றுடன் ஆயிரத்து 250ஆவது நாட்களை எட்டுவதையிட்டு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த உறவினர்கள், கடந்த ஆயிரத்து 250 நாட்களாக நாம் போராடி வருவதாகவும் தமக்கான தீர்வினைத் தருமாறு வெளிநாடுகளிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தமது பிரச்சினையை பார்க்காமல் தேர்தல் என அனைத்துக் கட்சிகளும் அலைவதாகத் தெரிவித்த அவர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ள நிலையில் அடுத்த தேர்தல் வருவதற்குள் தமிழர்கள் அடிமைப்படுத்தப்படுவார்கள் என்பது நிச்சயம் எனவும் சிங்களவர்களைப் பிரியப்படுத்தும் செய்தியாகவே அது உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க கொடிகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.