கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தில் ஒற்றையாட்சிக்குள் மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த்ததை இரத்து செய்தால் பலவீனமாக அரச நிர்வாகம் தோற்றம் பெறும் என்றும் ஆகவே 13 ஆவது திருத்தம் ஒருபோதும் இரத்து செய்யப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஒருமித்த நாட்டுக்குள் 13 ஆவது அரசியலமைப்பின் திருத்தம் ஊடாக அதிகார பகிர்வை வழங்குவதாக கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள கூடியது என்றும் குறிப்பிட்டார்.
தமிழ் மக்களுக்கு அரசியலமைப்பின் பிரகாரம் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் அத்தீர்வு ஒருமித்த நாட்டுக்குள் முரண்படாத விதத்தில் அமைய வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
ஜனாதிபதியின் கொள்கை திட்டங்களை புதிய அரசாங்கத்தில் முழுமையாக செயற்படுத்த ஆளும் தரப்பில் கூட்டணியமைத்துள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்கள் என அவர் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் பொதுத்தேர்தலுக்கான பொதுஜன பெரமுன தனித்து கொள்கை திட்டத்தை தயாரித்தால் நிறைவேற்றுத்துறைக்கும், சட்டத்துறைக்கும் இடையில் வீண் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும் ஜனாதிபதியின் கொள்கைத் திட்டம் ஒரு இனத்தையும், ஒரு மதத்தையும் வரையறுத்ததாக அமைய வில்லை என சுட்டிக்காட்டிய வாசுதேவ நாணயக்கார, அரசியலமைப்பின் 13வது திருத்த்ததை இல்லாதொழிப்பதாக ஆளும் தரப்பினர் தாங்கள் பிரபல்யமாகுவதற்காக கருத்துக்களை தெரிவிக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.