“சுமந்திரனின் பெயரை உச்சரிக்கும் கடைசி நாள் ஆகஸ்ட் 5” – கஜேந்திரகுமார்

421 0

“பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள திகதியான ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதிக்குப் பிறகு சுமந்திரனின் பெயரை உச்சரிக்க வேண்டிய தேவை ஏற்படாது” என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

“நேற்று முன்தினம்(18) வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றிருக்க வேண்டிய விவாதத்தில் எங்கள் கட்சி சார்பில் சுகாஷ் மற்றும் காண்டீபன் கலந்து கொள்ள தயாராக இருந்த போதும், பயத்தின் காரணமாக அந்த விவாதத்தில் கலந்து கொள்வதைத் தவிர்த்த சுமந்திரன், ஏதோ அந்த விவாதத்தில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதால் தான் அவர் பங்கேற்கவில்லை என்று ஊடகங்களுக்கு கூறியதாக அறிந்தேன்.

ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நான் ஒரு கட்சியின் தலைவர். நான் இன்னொரு கட்சியின் தலைவருடன் வாதம் செய்ய எப்பொழுதும் தயார்.

சுமந்திரன் கூட்டமைப்பின் தலைவர் கிடையாது. அதன் பொருட்டே என்னுடைய கட்சியின் சட்ட ஆலோசகர்களை அந்த வாதத்திற்கு அனுப்பி வைத்தேன். ஆனால் சுமந்திரன் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் தகுதியையும் இழந்து இப்பொழுது சட்ட ஆலோசகராக இருப்பவருடன் நான் விவாதம் செய்ய வேண்டிய தேவையுமில்லை.

சுமந்திரன் பொதுவெளிகளில் பேசுவதை கணக்கில் எடுக்க வேண்டாம் என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே சொல்லியிருக்கிறார். அத்தோடு வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்குப் பிறகு சுமந்திரன் பெயரை உச்சரிக்க வேண்டிய தேவையிருக்காது” என்று அவர் தெரிவித்தார்.