தமிழும் தேசியமும் என்ற தொணிப்பொருளில் கனடாவில் நடைபெற்ற எழுச்சித் திருமணம் புதிய வரலாற்றின் தொடக்கம்! – ம.செந்தமிழ்!

802 0

imageகனடா வாழ் ஈழத்தமிழ் இணையர் தமது திருமண விழாவினை தமிழும் தேசியமும் என்ற தொணிப்பொருளில் நடத்தியதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை வாழ்வியல் தளத்திற்கு முன்னகர்த்தி புதிய வரலாற்றைப் படைத்துள்ளார்கள்.

எமது கலை, கலாச்சாரம், பண்பாடு மற்றும் பாரம்பரியங்கள் தலைமுறை இடைவெளியின் காரணத்தினாலும் புலம்பெயர் வாழ்க்கை முறையினாலும் காணாமலாக்கப்பட்டுவரும் வேதனைமிகு தருணங்களிலெல்லாம் எங்கோ ஓர் மூலையில் இருந்து நம்பிக்கை தரும் நிகழ்வுகள் நடந்தவண்ணமேயுள்ளது.

அந்த வகையில் தாய் மொழி தமிழையும் தேசியத்தையும் ஒன்றிணைத்து மங்கல நாணில் சுமந்து கார்த்திக்-மீரா இணையர் இல்வாழ்வைத் தொடங்கியதன் மூலம் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளனர்.

image_1

வழக்கமான சடங்கு சம்பிரதாயங்களை விடுத்து தமிழ் மரபு வழியில் பலர் தமது திருமண விழாக்களை நடத்தி வருகின்றார்கள். அதே போன்று தேசிய உணர்வின் வெளிப்பாடாக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் திருவுருவப் படத்தின் முன்பாகவோ பின்னணியிலோ ஆங்காங்கே திருமண விழாக்களும் நடைபெற்று வருகின்றது.

இன்னிலையில், தமிழையும் தேசியத்தையும் குறிக்கும் அடையாளங்களை தங்க நாணையங்களில்(காசு) பொறித்து கோர்க்கப்பட்ட மங்கல நாணையே(தாலி) மணமகள் கழுத்தில் மணமகன் கட்டியுள்ளதன் மூலம் பெரும் பண்பாட்டுப் புரட்சிக்கு வித்திடப்பட்டுள்ளது.

ஒரு நாணயத்தின் முன் பகுதியில் திருவள்ளுவரின் உருவமும் பின் பகுதியில் ‘அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ஃ’ என்ற உயிரெழுத்துக்களும் தமிழின் அடையாளமாக பொறிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது நாணயத்தின் முன் பக்கத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் உருவமும் பின் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினையான புலி உருவமும் தேசியத்தின் அடையாளமாக பொறிக்கப்பட்டுள்ளது.

image_2

தாலி காசுகளில் இவ்வாறு தமிழையும் தேசியத்தையும் இடம்பெறச்செய்ததுடன் நின்றுவிடாது திருமண விழா முழுமைக்கும் தமிழும் தேசியமும் தொணிக்கும் விதத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.

தேசம் காக்கும் போரில் தம்முயிரை கொடையாக கொடுத்த மாவீரர்களை குறிக்கும் வகையில் மாவீரர்களை குறிக்கும் பொதுப்படம் கரும்புலிகளை குறிக்கும் படம் என்பவற்றுடன் இணையரின் குடும்பத்து மூதாதையர்களின் படங்களையும் பிரதியெடுத்து அட்டைகளாக்கி திருமண விழா நடைபெற்ற திடலில் இருந்த ஒரு மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்தது.

சுப மங்கல நிகழ்வுகளில் பெற்ற தாயாக இருந்தாலும் விதிவசத்தால் விதவைக் கோலமேற்றிருந்தால் முன்னிலையேற்கும் தகுதியை தட்டிப்பறிக்கும் நன்றி மறந்த சமூகத்தில் மாவீரர்களையும் குடும்ப முன்னோர்களையும் படங்களாக தொங்கவிட்டு திருமண நிகழ்வை நடத்தியிருப்பது போற்றத்தக்க துணிச்சலான முடிவாகும்.

image_3

திருவளுவர் சிலையும் தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது மார்பளவு சிலையும் திடலில் வைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு வைக்கப்பட்டிருந்த தமிழீழத் தேசியத் தலைவரின் சிலையையும் தாலிக்காசில் தலைவர் உருவத்தையும் பார்த்தவர்களில் பலர் உணர்ச்சி மேலிட்டால் கண்கலங்கினாலும் ஒருவித பெருமிதத்துடன் இருந்ததையும் பார்க்க முடிந்தது.

கடந்த ஆவணி மாத இறுதியில் கனடாவில் நடைபெற்ற இத் திருமண நிகழ்வு குறித்த தகவல்கள் முகநூலில் பதிவிடப்பட்டிருந்ததுடன் அதனை அடிப்படையாக கொண்டு பல்வேறு இணையத்தளங்களும் தமிழ் சிங்கள பத்திரிகைகளும் தமிழ் செய்தி தொலைக்காட்சிகளும் செய்திகளை வெளியிட்டிருந்தன.

இது குறித்து முழுமையான பதிவொன்றை செய்யும் நோக்கில் நாம் காத்திருந்த நிலையில் தற்போதுதான் அது தொடர்பான புகைப்படங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறான எழுச்சித் திருமணம் குறித்து இணையர் கருத்து தெரிவிக்கையில்…

image_4

தமிழ் மீதும் தமிழீழ விடுதலை போராட்டத்தின் மீதும் இயல்பான பற்றுதல் என்னுள் இருந்தது. வெறுமனே நினைவுத் தளத்திலும், ஆதரவுத் தளத்திலும், உணர்வுத் தளத்திலும் இவற்றை பதிவுசெய்வதுடன் நிறுத்திக்கொள்ளாது எமது வாழ்க்கையின் ஒவ்வோர் கட்டத்திலும் அவற்றுடன் இணைந்து பயணிக்க எண்ணியதன் விளைவுதான் இது.

எனது விருப்பத்தை முதலில் மீராவிடம் தெரிவித்து ஆலோசிதேன். அவர் முழுமனதுடன் ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் இரு வீட்டாரிடம் தெரிவித்து அவர்களது ஆதரவும் கிடைத்ததால் உற்சாகமாக இருந்தது.

திருமண விழாவில் தேசியம் சார்ந்த முன்னெடுப்புகளுக்கு உறவினர்கள் சிலர் எதிர்த்தும் விதண்டாவாதம் செய்தும் வந்த போதிலும் குடும்பத்தாரின் ஒத்துழைப்புடன் நினைத்ததை விட வெகு சிறப்பாக நடந்து முடிந்ததில் பெரும் மகிழ்ச்சி.

வந்திருந்தவர்களின் ஆசீர்வாதத்திற்காக தாலி எடுத்துச் செல்லப்பட்ட போது தாலிக் காசில் தலைவர் உருவத்தைப் பார்த்தவர்கள் ஒரு கணம் இன்ப அதிர்ச்சிக்குள்ளாகியதையும் அதன் பின்னர் கண்கலங்கிய பெருமிதத்துடன் தொட்டு வணங்கி ஆசிர்வதித்ததையும் பார்க்க முடிந்தது.

அருகே வந்து வாழ்த்தியபோது அவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளைப் பார்த்தபோது இந்த முயற்சிக்காக நாம் கடந்துவந்த துயரங்களெல்லாம் சிறுமைப்பட்டிருந்ததை உணர்ந்தேன் என மணமகன் கார்த்திக் இன்றும் அந்த பெருமிதம் மாறா நிலையில் கூறினார்.

சின்னஞ் சிறு வயதில் கனடா வந்திருந்தாலும் ஓரளவு நாட்டு விடயத்தில் ஈடுபாடு இருந்தது. வீட்டிலுள்ளவர்களும் அது குறித்து பேசிவருவதால் தகவல்கள் தெரிந்துகொள்ள முடிந்தது. இவரும் தமிழ் மொழி குறித்தும் தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தும் பேசுவது வழக்கம்.

image_5

இன்னிலையில் தான் திருமண நிகழ்வை இவ்வாறு செய்வது குறித்து ஆலோசித்தார். தேசியத் தலைவர் காலத்தில் வாழ்ந்துவரும் நாங்கள் அவரது முக்கியத்துத்தினை அறிகின்றோம். நாளை எங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தேசியத் தலைவரின் படத்தை காட்டி அவரது பெருமைமிகு வரலாற்றைச் சொல்வதை விட தாலியில் சுமந்து உணர்த்துவது இன்னும் ஆழமாக உணர்த்தும். தாலி எமது வாழ்வியலில் எவ்வளவு முக்கியமானது என்பதை உணரும்போது அப்படிப்பட்ட தாலியில் உருவமாக சுமக்கும் தலைவர் சாதாரணமானவராக இருக்க முடியாது என்பதை எமது பிள்ளைகள் உணர்ந்துகொள்வார்கள். அதனால் தாலி காசில் இவற்றை பொறிக்கலாம் என்பதை விளக்கிக் கூறியபோது எனக்கும் அது சரியெனத் தோன்றியதால் முழுவிருப்போடு அதற்கு சம்மதித்தேன்.

எங்கள் இனத்தின் பெருமைமிகு அடையாளங்களை தாலிக்கொடியில் சுமப்பதில் அளவுகடந்த மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருப்பதாக மணமகள் மீரா சொல்லும்போதே உள்ளத்திலிருக்கும் உணர்வு அவரின் முகத்தில் பூரிப்பாக எட்டிப்பார்த்தது.

இத்திருமணம் குறித்து கேள்வியுற்ற உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அய்யா பெரும் மகிழ்ச்சியடைந்தார். அவருக்கே உரிய பாணியில் இவ்வாறு கூறினார்… ‘நாட்டுக் கொடியை வீட்டில் பார்த்திருக்கிறேன். முதல் தடவையாக வீட்டுக் கொடியில் (தாலிக்கொடி) நாட்டுக் கொடியைப் பார்க்கிறேன் உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. நஞ்சை கழுத்தில் மாலையாகப் போட்டிருந்த புலிகளை இவர்கள் நெஞ்சில் சுமக்கிறார்கள்.’ என்று கூறியதோடு இந்த இணையர் வாழ்வு சிறக்க மனதார வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டிருந்தார்.

இத்திருமணத்தை முன்மாதிரியாக கொண்டு தமது திருமணத்தையும் நடத்த பல புலம்பெயர் இளையோர் ஆர்வமாக உள்ளதை அவர்களது விசாரிப்புகள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

அதைவிட ஏற்கனவே திருமணமானவர்கள் கூட தாத்தமது தாலிக் காசுகளை இவ்வாறு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை கார்த்திக்-மீரா இணையரது முயற்சியின் உன்னதத்தின் வெளிப்பாடேயாகும்.

இவ் எழுச்சித் திருமணத்தை சாதாரணமாக கடந்துவிடமுடியாது. தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இம் முயற்சியை வரவேற்றாலும் பாரம்பரிய வழக்கத்திற்கு மாறான முயற்சியை ஏற்கத் துணிவற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.

அதுவும் தலைவர் பிரபாகரன் அவர்களின் உருவத்தை தாலிக் காசில் பதித்தது தப்பு என்போர் வழி வழியாக பின்பற்றப்பட்டுவரும் மரபை மாற்றுவதால் அதுவும் தாலியில் இவ்வாறு செய்வது குற்றமாகிவிடுமோ என்ற அச்சத்தினாலேயே அவ்வாறு கூறுகின்றனர்.

ஒன்டரை நூற்றாண்டுகளாக எம்மை அடிமைப்படுத்தி ஆண்டுவிட்டுப்போன லண்டன் ராசா ராணி உருவம் பதித்த காசை தாலிக்கொடியில் சுமக்கும் போது ஏற்படாத குற்றமா இப்போது வந்துவிடப்போகிறது…? எம்மை அடிமைப்படுத்தியவர்களின் குறியீட்டை தாலிக்கொடியில் சுமக்கும் நாம் எம் இனத்தின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்துப் போராடிவரும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது உருவத்தையும் புலிச் சின்னத்தையும் சுமப்பத்தில் தவறோ குற்றமோ ஏதும் வந்துவிடப்போவதில்லை.

தமிழர் தரப்பு எப்போதும் போல வாதப்பிரதிவாதங்களுக்குள் காலம் கடத்தி வருகையில் தமிழும் தேசியமும் இணைத்து உருவாக்கப்பட்டிருக்கும் தாலிக்கொடியின் பின்னால் இவ்வளவு திட்டமிடல் இருப்பதை அறியா நிலையில் முகநூல் பதிவில் இடப்பட்ட ஒற்றைப் புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு சிங்கள இணையமொன்று ‘தமிழர்களின் போராட்டத்தை இனி யாராலும் அழிக்க முடியாது. தமிழர்கள் பெரிதும் மதிக்கும் தாலிக்கொடியில் பிரபாகரன் படத்தையும் புலிச் சின்னத்தையும் பொறித்துள்ளதன் மூலம் தலை முறைகள் கடந்து போராட்ட வரலாற்றை கொண்டு சென்றுள்ளார்கள்’ என்று செய்தியாக்கியிருந்தது.

ஒற்றைப் புகைப்படத்தைக் கொண்டு எங்கோ ஓர் மூலையில் இருந்து எமது எதிரி இவ்வாறு அனுமானிக்கும் போது அதன் முழு விபரமும் தெரிய வரும்போது உண்மையில் மலைத்துப்போய்விடுவான். ஆனால் நாமோ அதன் முக்கியத்தை உனராதவர்களாகவே இருக்கின்றோம் என்றால் வெட்கக்கேடு.

தாலி- தாலிக்கொடி தமிழர்களின் பாரம்பரியம் கிடையாதென்றும் ஆணாதிக்கத்தின் அடையாளம் என்றும் பல்வேறு தளங்களில் வாதப் பிரதிவாதங்கள் முடிவின்றித் தொடர்ந்து வரும் நிலையில் தமிழர் வாழ்வியலில் தாலி குறித்து பார்ப்பது அவசியமாகும்.

‘தாலி’ என்பது இன்றிருக்கும் வடிவத்திலேயே முன்பிருந்து வரவில்லை. பாரம்பரியமாக ஒரு வடிவம் எக்காலத்திலும் பேணப்படவுமில்லை. ஆதாம் ஏவால் காலத்தில் ஏவாலின் கழுத்தில் சூடப்பட்ட மலர் மாலையே முதல் தாலிக்கொடியாகும். உன்னை என்னவளாக ஏற்றுக் கொண்டேன் என்பதன் அடையாளமாகவும் அன்பின் வெளிப்பாடாகவும் அது அணிவிக்கப்பட்டது. பின்னர் வரலாற்று வழியே பல்வேறு வடிவமெடுத்து அவரவர் இன, மத அடிப்படையில் ஒவ்வொரு விதமாக உருமாறி இன்று நடைமுறையில் உள்ளது.

கி.பி. 11-ம் நூற்றாண்டில் தோன்றிய கந்தபுராண காலத்தில் இருந்து தமிழர் திருமணத்தில் மங்கல நாண் கட்டுதல் தோன்றி யிருக்க வேண்டுமென்பதே வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. பெரியபுராணம், தக்கையாகப்பரணி, கம்பராமாயணம், நம்பி திருவிளையாடல், பரஞ்சோதி திருவிளையாடல் ஆகிய இலக்கியங்களாலும் இது அறியப்படுவதாக தமிழறிஞர்கள் பதிவுசெய்துள்ளார்கள்.

இன்னிலையில் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில் தாலி குறித்த பதிவு உள்ளதாக சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் ஆணித்தரமாக பதிவுசெய்துள்ளார்.

சிலப்பதிகாரத்தின் கதாநாயகி கண்ணகி தாலி அணிந்திருந்ததற்கு சான்று இருப்பதாகக் கூறிய அவர், “மங்கல அணியிற்பிறிதணி மகிழாள்” என்ற சிலப்பதிகார வரிகளை மேற்கோள் காட்டினார். “கண்ணகி கோவலனைப் பிரிந்திருந்த காலத்திலே தாலி ஒன்றைத் தவிர மற்ற அணிகளை எல்லாம் துறந்திருந்தாள்” என்று இளங்கோவடிகள் கூறுவதாக பதிவுசெய்த ம.பொ.சி. அவர்கள் சங்க இலக்கியமான புற நானூறு, நெடுநல்வாடையிலும் தாலி குறித்த தகவல்கள் உண்டு என்பதையும் குறிப்பிட்டுள்ளார். இதனை சமகாலத்திலே மறுத்துரைத்து தமிழறிஞர்களுக்கிடையே அனல் தெறிக்கும் விவாதங்கள் நடதுள்ளன.

“புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி கற்கெழு சிறுகுடிக் கானவன் மகளே” என்ற அகநானூற்றுப் பாடலில் தாலிக்குறித்து கூறப்பட்டுள்ளது. அதாவது புலியை வென்ற வீரத் தமிழ்மகன் அதன் பற்களை அழகு செய்து நூலிற் கோத்துத் தன்பால் அன்புகொண்ட மனைவிக்கு அணிவித்து மகிழ்ந்தான் என்பதாக அதற்கு அர்த்தம் கூறப்படுகிறது.

இதே வழிமுறைக்கு ஒத்ததாகவே தமிழிழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தாலியும் இருந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கிடையே நடைபெறும் திருமணத்தின் போது மஞ்சள் கயிற்றில் புலிப் பல்லையே தாலியாக கோர்த்து கட்டிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் உணர்வாளராகவும் தமிழ்த் தேசியப் பற்றாளருமான செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழ் முதல் எழுத்தான ‘அ’ வை தாலியாக கோத்த மங்கல நாணையே மனைவியின் கழுத்தில் கட்டி வாழ்க்கைத் துணையாகா ஏற்றிருந்தார்.

இவையனைத்தையும் ஒன்று சேர்த்தாற்போல் கார்த்திக்-மீரா இணையரை இணைத்திருக்கும் தமிழும் தேசியமும் தொணிக்கும் மங்கல நாண் அமைந்துள்ளது. அதை அப்படியே பின்பற்ற வேண்டுமென்ற கட்டாயமில்லை. சிறியவர்களாக இருந்தாலும் தமது திருமணத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கும் விடயம் உன்னதமானது. வேண்டுமாயின் இதே தொணிப்பொருளின் அடிப்படையில் வடிவமைப்பு மாறுதல்களுடன் அமைத்தும் பயன்படுத்தலாம்.

இவ்வாறு தலைமுறைகள் கடந்து நீண்ட நெடிய வரலாற்றுப் பின்னணிகொண்டு தமிழர் வாழ்வியலின் ஓரங்கமாகியுள்ள தாலிக்கொடிக்கு நூற்றாண்டுகள் கடக்கும் வல்லமை உண்டென்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம். ஆகவே, தமிழ் மொழி மற்றும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்த வரலாற்றை இன்னும் பற்பல நூற்றாண்டுகள் கடந்த சந்ததிக்கு எம் வாழ்வியலோடு சமாந்தரமாகக் கடத்தும் கருவியாக தாலிக்கொடியை மாற்றுவோம்.

புலம்பெயர் தமிழர்களுக்கே பெரும்பாலும் இந்த முயற்சி சாத்தியமாகும். ஒன்று பத்தாகி.. பத்து நூறாகி.. நூறு ஆயிரமாகி.. ஆயிரம் லட்சமாகி பல்கிப் பெருகி எம் இனத்தின் பெருமை மிகு வரலாற்றை வரலாற்றுத் தடத்தில் அழுத்தமாக பதிவுசெய்யும் முகமாக இதை வழக்கமாக்குவோம்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’