மலையக மக்களுக்கு உரிய வகையில் சேவைசெய்யக்கூடிய ஆற்றல் எமக்கே உள்ளது – பழனி திகாம்பரம்

263 0

அதிகாரத்தை பயன்படுத்தி மலையக மக்களுக்கு உரிய வகையில் சேவைசெய்யக்கூடிய ஆற்றல் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கே இருக்கின்றது. எனவே, பொதுத்தேர்தல் மூலம் எமது கரங்களை பலப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும்,  ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

லிந்துலை பாமஸ்டன் ரட்ணகிரி தோட்டத்தில்  இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,  ”கடந்த ஆட்சியின்போது அனைத்து தோட்டங்களுக்கும் சேவைகளை வழங்கியிருந்தேன். மேலும் பல திட்டங்களையும் முன்னெடுக்கவிருந்த நிலையிலேயே ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.

நாம் கடந்த நான்கரை வருடங்களில் மக்களை ஏமாற்றவில்லை. ஆனாலும், 80 வருடங்களாக செயற்படாதவர்கள் இன்று எம்மை விமர்சிக்கின்றனர். போலி வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர்.

தனிவீட்டு திட்டம், மலையக அதிகார சபை, பிரதேச செயலகம் அதிகரிப்பு உட்பட என்னால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றினேன். இவ்வாறு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டுதான் இன்று வாக்கு கேட்கின்றனர்.

இனிவரும் காலப்பகுதியில் எமது இளைஞர்களுக்கு இங்கேயே வேலை செய்யக்கூடிய சூழ்நிலை உருவாக்க வேண்டும். கைத்தொழில் பேட்டைகள் அமையவேண்டும். கடந்த ஆட்சியின்போது இந்தியாவுடன் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். ஆட்சிமாற்றத்தால் அதனை தொடரமுடியவில்லை. எமது ஆட்சியின்கீழ் கைத்தொழில் பேட்டைகள் அமைக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.