ஐக்கிய மக்கள் சக்தியானது வாடகைக்கு வாங்கப்பட்ட கட்சியாகும். அந்த கட்சிக்கு கொள்கைகள் கிடையாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
கொத்மலை நவதிஸ்பன பகுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தாவது, ” ஐக்கிய தேசியக்கட்சிக்கென ஒரு கட்டமைப்பு இருக்கின்றது. அது எமது கலாச்சாரம், மதம். ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியென்பது, அதிக தலைவர்கள் உள்ள கட்சியாகும். சஜித்தை தலைவர் என்கின்றனர், மேலும் சிலர் சம்பிக்க தலைவர் என்கின்றனர். ஆனால், உறுதியான தலைவர் ஒருவர் இல்லாத கட்சியாகும்.
எனது தந்தை ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து வெளியேறியபோது புதிய கட்சியொன்றை உருவாக்கினார். ஆனால், சஜித் அணியினர் கட்சியொன்றை வாடகைக்கு வாங்கியுள்ளனர். அந்த கட்சிக்கு கொள்கை இல்லை, இரண்டாம் தலைமைத்துவமும் இல்லை.
ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிராக பல கட்சிகள் உருவாகலாம். அவற்றுக்கு ஆயுள் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியை எவராலும் அழிக்கமுடியாது. 50 களில் பண்டார நாயக்க வெளியேறினார். சுதந்திரக்கட்சியை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் கை சின்னம் இருந்தது. அதன் பின்னர் கதிரை, வெற்றிலை என இன்று மொட்டு சின்னத்தில் வந்து நிற்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இதே நிலைமையை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தியில் சஜித்துக்கும், சம்பிக்கவுக்குமிடையில் அதிகாரப்போட்டி ஆரம்பித்துவிட்டது. நிதி பலத்தை பலப்படுத்தி சஜித் பக்கம் உள்ள உறுப்பினர்களை பாட்டளி வாங்கிவிடுவார். அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ஆவதே அவரது இலக்காகும். எமது கட்சியிலும் மறுசீரமைப்பு அவசியம். அதனை நிச்சயம் செய்வோம்.” என்றார்.