இரகசியமாக பதிவுத்திருமணம் செய்த மாணவி தற்கொலை

317 0

யாழ்ப்பாணம் நகரில் உள்ள ஓர் பிரபல பெண்கள் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர் உயிரை மாய்த்துள்ளார்.

அவர் இரகசியமாக பதிவுத்திருமணம் செய்து, பின்னர் விட்டு விலகிய கணவன், யாழ் நகரில் அவரை வழிமறித்து, ஆடைகளை கிழித்து அட்டகாசம் செய்ததை தொடர்ந்தே உயிரை மாய்த்துள்ளார்.

19 வயதான யுவதியொருவரே உயிரை மாய்த்துள்ளார்.

தாயார் வேறு ஒரு திருமணம் செய்த நிலையில், தந்தையாரும் பிரிந்து சென்றுவிட்ட நிலையில் பேத்தியாருடன் வாழ்ந்து வந்தார் இந்த யுவதி.

கடந்த வருடம் 22 வயதான வாலிபர் ஒருவருடன் காதல் வசப்பட்ட இந்த யுவதி, யாருக்கும் தெரியாமல் இரகசியமாக பதிவுத் திருமணம் செய்திருந்தார். இதன் பின்னர் கணவர் வீட்டில் தங்கியிருந்தார்.

இந்த காலப்பகுதியில் கணவரினால் அவர் தாக்கப்பட்டதாக, மாணவியின் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தாக்கப்பட்டது, மற்றும் கணவனிற்கு தவறான தொடர்புகள் இருப்பதாக குறிப்பிட்டு மாணவி கடந்த 2 மாதங்களின் முன்னர் பேத்தியின் வீட்டிற்கே திரும்பி வந்ததாகவும், உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், மாணவியை மீண்டும் தன்னுடன் வாழ வருமாறு கணவன் வலியுறுத்தி வந்துள்ளார். எனினும், மாணவி அதை மறுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் யாழ் நகரிலுள்ள தனியார் கல்வி நிலையமொன்றுக்கு மாணவி சென்று திரும்பியபோது, கணவன் வழிமறித்து மாணவியுடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். தன்னுடன் வீட்டுக்கு வர வலியுறுத்தியபோதும், மாணவி மறுத்துள்ளார்.

இதன்போது, மாணவியின் சட்டை கிழிக்கப்பட்டதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அந்த பகுதிக்கு வந்த உறவினர் ஒருவர் நிலைமையை அவதானித்து, யுவதியை அங்கிருந்து மீட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

வீட்டிற்கு சென்று நடந்ததை பேத்தியாரிடம் கூறிய யுவதி, இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறையிட வருமாறு கோரியுள்ளார். எனினும், பொலிஸ் முறைப்பாடு செய்ய வேண்டாமென பேத்தியார் மறுத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு யுவதி சுருக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.