பள்ளிகளை எப்போது திறக்கலாம்?- கல்வித்துறை இன்று மத்திய அரசுக்கு பதில்

287 0

ஆகஸ்டு முதல் அக்டோபர் மாதங்களுக்குள் பள்ளிகளை எப்போது திறக்கலாம்? என்பது குறித்து பெற்றோரிடம் கருத்துக்கேட்டு, தமிழக கல்வித்துறை இன்று மத்திய அரசுக்கு பதில் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. எப்போது மீண்டும் திறக்கப்படும்? என்பது இதுவரை முடிவு எடுக்கப்படாமல் இருக்கிறது.

இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் பள்ளிக்கல்வி துறை சார்பில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வித்துறை செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘பெற்றோரிடம் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக்கேட்டு அனுப்பவேண்டும். அதில், பள்ளிகள் மீண்டும் திறக்க வசதியான காலம் எது? (ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர்), மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது பள்ளிகளில் செய்யப்படவேண்டிய பெற்றோரின் எதிர்பார்ப்புகள் என்ன?, மேலும் இதுதொடர்பான பிற கருத்துகள் ஆகியவற்றை குறிப்பிட்டு coordinationee1@gmail.com, rsamplay.edu@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு 20-ந்தேதிக்குள் (இன்று) அனுப்ப வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், பெற்றோரிடம் இருந்து கருத்துகளை கல்வித்துறை பெற்று இருக்கிறது. பெற்றோரின் கருத்துகளையும், மாநில அரசின் கருத்துகளையும் சேர்த்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு கல்வித்துறை இன்று பதில் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பெற்றோரும் நேரடியாக இந்த மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுடைய கருத்துகளையும் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையில் கடந்த 15-ந்தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் பள்ளிகள் திறப்பு மற்றும் பாதுகாப்பு திட்டங்கள் குறித்த ஆலோசனை நடத்தியது.

அதில் தமிழக அரசின் சார்பில் கலந்து கொண்ட கல்வித்துறை அதிகாரிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசைப்போல, அண்டை மாநிலமான தெலுங்கானாவும் இன்னும் முடிவு செய்யவில்லை என்றே தெரிவித்துள்ளது. இதுதவிர, பிற அண்டை மாநிலங்களான ஆந்திரா செப்டம்பர் 5-ந்தேதியும் (தற்காலிக முடிவு), கேரளா ஆகஸ்டு 31-ந் தேதிக்கு பிறகும், கர்நாடகா செப்டம்பர் 1-ந்தேதிக்கு பிறகும் திறக்கலாம் என்று அந்தந்த மாநில கல்வித்துறை சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் அந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.