சென்னை உள்ளிட்ட 63 விமான நிலையங்களில் 198 அதிநவீன கருவிகள் பொருத்த முடிவு

280 0

விமான பயணிகளை பரிசோதிக்க சென்னை உள்ளிட்ட 63 விமான நிலையங்களில் 198 அதிநவீன கருவிகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையம் (ஏ.ஏ.ஐ) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள 100-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் பயணிகளை சோதனையிடுவதற்கு தற்போது “மெட்டல் டிடக்டர்’ எனப்படும் உலோக உணர்வுக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், அந்தக் கருவிகளால் உலோகத்தைப் பயன்படுத்தி செய்யப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை மட்டுமே கண்டறிய முடியும். உலோகம் பயன்படுத்தப்படாத ஆயுதங்களை அந்தக் கருவிகளால் கண்டறிய முடியாது.

ஆனால் ‘பாடி ஸ்கேனர்’ எனப்படும் அதிநவீனக் கருவிகளைக் கொண்டு உலோகம் பயன்படுத்தப்படாத ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளையும் கண்டறியலாம்.

எனவே 2020ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் அத்தகைய அதிநவீன சோதனைக் கருவிகளைப் பொருத்த வேண்டும் என கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்தியாவில் உள்ள முக்கியமான 63 விமான நிலையங்களுக்கு 198 ‘பாடி ஸ்கேனர்’ அதிநவீனக் கருவிகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையம் (ஏ.ஏ.ஐ) தெரிவித்துள்ளது.

இந்த அதிநவீன கருவிகளை வாங்குவதற்காக டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும் 3 நிறுவனங்கள் ஏலம் எடுத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

198 அதிநவீன கருவிகளில் அதிகபட்சமாக சென்னை விமான நிலையத்தில் 19 அதிநவீன கருவிகள் பொருத்தப்பட உள்ளதாக ஏ.ஏ.ஐ. தெரிவித்துள்ளது. அதேபோல் திருச்சி மற்றும் கோவை விமான நிலையங்களில் தலா 4 அதிநவீன கருவிகள் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.