நைஜீரியாவில் பாதுகாப்பு படையினர் மீது கொள்ளை கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 23 வீரர்கள் உயிரிழந்தனர்.
போகோஹரம், ஐ.எஸ் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நைஜீரியாவில் பொருளாதாரம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது.
இதனால் அங்கு வாழும் மக்களில் சிலர் குழுக்களாக இணைந்து பொருளாதார தேவைகளுக்காக உணவு பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து வருகின்றனர்.
ஆயுதம் ஏந்தி கொள்ளையில் ஈடுபட்டும் இத்தகைய குழுவினர் கிராமங்களுக்குள் நுழைந்து அங்கு வாழும் மக்களை கொன்றும் வீடுகளை எரித்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு செயல்படும் குழுக்களில் பன்டீட்ஸ் என்ற கொள்ளை கும்பல் முக்கியமான ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இந்த கொள்ளை கும்பல் போகோஹரம் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது.
இந்த கும்பலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சில சமயங்களில் இரு தரப்புக்கும் இடையே மோதல்கள் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், நைஜீரியாவின் ஹட்சினா மாகாணம் ஜிபியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் காட்டுப்பகுதியில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த காட்டுப்பகுதிக்குள் மறைந்திருந்த பன்டீட்ஸ் கொள்ளை கும்பல் பாதுகாப்புப்படையினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது.
கொள்ளை கும்பல் நடத்திய தாக்குதலில் நைஜீரிய பாதுகாப்பு படையை சேர்ந்த 23 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், சிலரை கொள்ளை கும்பல் கடத்தி சென்றுள்ளதாக நைஜீரிய பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.