சிறிலங்காவில் சுகாதார வழிகாட்டல்களை மீறினால் 6 மாத சிறை – சட்டத்தரணிகள் எச்சரிக்கை

277 0

சிறிலங்கா பொதுத் தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானியின் அறிவுறுத்தல்களை மீறுபவர்களுக்கு எதிராக ஆறுமாத காலம்வரை சிறைத்தண்டனை பெற்றுக்கொடுக்க முடியும் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.தசில்வா குறிப்பிடுகையில், “தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளிவந்திருக்கின்றது.

இந்த வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் சட்ட திட்டங்களை மீறும் யாராக இருந்தாலும் அந்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் யாராவது இந்த சட்டத்தை மீறியதற்காக குற்றவாளியானால் அவருக்கு ஆறுமாதம் சிறைத்தண்டனை அல்லது ஆயிரம் ரூபா அளவில் அபராதம் விதிக்கலாம். அல்லது இந்த இரண்டையும் மேற்கொள்ளலாம்.

அத்துடன் குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளுக்கமைய, தண்டனைச்சட்டத்துக்கமைவான குற்றங்களை யாராவது செய்தால் அவர்களுக்கு அந்த சட்டத்தில் இருந்து வெளியேறி, குறித்த தண்டனைச் சட்டத்தின் அடிப்படையில் அல்லது தேர்தல் சட்டத்தை மீறும் பட்சத்தில் மேற்கொள்ளப்படும் குற்றத்துக்கமைய நடவடிக்கை எடுக்கமுடியும். இதுதொடர்பாகவும் வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது” என தெரிவித்துள்ளார்.