தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரையறைகளை மத்திய அரசு இந்த மாதம் 1-ந்தேதி முதல் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் மாற்றி அமைத்துள்ளது. இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பதிவு செய்வதற்கான புதிய இணையதளம் மற்றும் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி ரூ.1 கோடிக்கு மிகாமல் எந்திரங்கள், தளவாட முதலீடு மற்றும் ரூ.5 கோடிக்குள் விற்று முதல் உள்ள நிறுவனங்கள் குறு நிறுவனங்கள் என்று வகைப்படுத்தப்படுகிறது.
எந்திரங்கள் தளவாட முதலீடு ரூ.1 கோடிக்கு அதிகமாகவும் விற்றுமுதல் ரூ.10 கோடி வரையிலும் உள்ள நிறுவனங்கள், விற்றுமுதல் ரூ.5 கோடிக்கு அதிகமாகவும் ரூ.50 கோடிக்கு குறைவாகவும் உள்ள நிறுவனங்கள் சிறு நிறுவனங்கள் என்று வகைப்படுத்தப்படுகிறது. எந்திரங்கள் தளவாட முதலீடு ரூ.10 கோடிக்கு அதிகமாக ரூ.50 கோடி வரையிலும், விற்று முதல் ரூ.50 கோடிக்கும் அதிகமாக ரூ.250 கோடி வரையிலும் உள்ள நிறுவனங்கள் நடுத்தர தொழில் நிறுவனங்கள் என்று வகைப்படுத்தப்படுகிறது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான உத்யம் பதிவு https://udyamregistration.gov.in என்ற இணைய தளத்திலிருந்து சுய உறுதிமொழியுடன் பெற்றுக்கொள்ளலாம். இந்த இணையதளத்தின் மூலம் பெறப்படும் சான்றிதழ் உத்யம் பதிவு சான்றிதழ் என்றும், இந்த பதிவு எண் உத்யம் பதிவு எண் என்றும் அழைக்கப்படும். நிறுவனத்தின் எந்திரங்கள் தளவாட மதிப்பு மற்றும் விற்று முதல் மதிப்பு, வருமான வரி தாக்கல் மற்றும் ஜி.எஸ்.டி தாக்கல் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். புதிய நிறுவனங்களுக்கு சுய உறுதி மொழியின் அடிப்படையில் எந்திரதளவாட மதிப்பு மற்றும் விற்று முதல் மதிப்புகள் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும்.
ஏற்கனவே தொழில் முனைவோர் ஒப்புகை பகுதி 2, உத்யோக் ஆதார் மெமோரண்டம் ஆகிய முறைகளில் பதிவு செய்த நிறுவனங்கள், 1.7.2020-க்கு பின் உத்யம் பதிவு இணையதளத்தில் 31.3.2021-க்குள் பதிவுசெய்து கொள்ள வேண்டும். 30.6.2020-க்கு முன் பெற்ற உத்யோக் ஆதார் மெமோரண்டம் தொழில் முனைவோர் ஒப்புகைபகுதி 2 ஆகியவை 31.3.2021 வரை மட்டுமே செல்லத்தக்கதாகும். எனவே தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தை உத்யம் பதிவு இணையதளத்தின் மூலமாக பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் கூடுதல் விவரங்களுக்கு தர்மபுரி மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.