தமிழக அரசின் மின்கட்டணத்தை பார்த்தால் மின்சாரம் நமக்குள் பாய்ந்தது போல் இருக்கிறது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ஒரு பக்கம் கொரோனா வாட்டி வதைக்கிறது. இன்னொரு பக்கம் மக்களை முதலமைச்சர் வாட்டி வதைக்கிறார்.
கொரோனா தொற்று ஏற்பட்டா மக்கள் எந்தளவுக்கு அதிர்ச்சியும் மன வேதனையும் ஆளாவார்களோ, அதைவிட அதிகமா ஒவ்வொரு வீட்டிற்கும் வந்து இருக்க மின்கட்டணத்தை பார்த்து மக்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.
மின்கட்டணத்தை மின்கட்டணத்தை பார்த்தால் மின்சாரம் நமக்குள் பாய்ந்தது போல் இருக்கிறது. வீட்டில் முடங்கிய மக்களுக்கு அரசாங்கம் விதிக்கும் அபராதமா மின் கட்டணம்?. தமிழக அரசு நிர்ணயித்துள்ள மின் கட்டணம் நியாயமானது அல்ல.
மக்களுக்கு சலுகை தர அரசுக்கு பணமில்லையா? மனமில்லையா?. மின் கட்டண வசூலில் மின் வாரியத்திற்கு லாபம். சாதாரண மக்களுக்கு மிகப் பெரிய சுமை. தவறான அடிப்படையில் மின் கணக்கீடு எடுத்துள்ளார்கள் என மக்கள் கூறுகின்றனர். கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் மின்சார கட்டணத்தில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. சலுகை அளிக்காமல் கட்டணத்தை அதிகப்படுத்துவது ஏற்புடையதல்ல.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.