ரஷியா: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கவர்னரை விடுதலை செய்யக்கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

262 0

ரஷியாவில் 15 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலையில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள மாகாண கவர்னரை விடுதலை செய்யக்கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரஷியாவின் ஹபர்ஸ்வோக் மாகாண கவர்னராக செயல்பட்டு வருபவர் செர்ஜி ஃப்ர்ஜர். இவர் 2018 ஆம் ஆண்டு நடந்த மாகாண கவர்னர் தேர்தலில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆதரவு பெற்ற வேட்பாளரை தோற்கடித்து பெரும் வெற்றி பெற்றார்.
இதற்கிடையில், 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தொழிலதிபர்கள் கொலைச்சம்பவங்களில் செர்ஜிக்கு தொடர்பு இருப்பதாக கூறி போலீசார் கடந்த வாரம் அவரை கைது செய்தனர். இந்த கைது சம்பவம் அம்மாகாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவர்னருக்கும், 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், அதிபர் புதினின் ஆதரவு பெற்ற வேட்பாளரை தோற்கடித்ததால் வேண்டுமென்றே செர்ஜி கைது செய்யப்பட்டதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ரஷியாவில் நடைபெற்ற போராட்டம்
இந்நிலையில், கவர்னர் செர்ஜி கைது சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் ஹபர்ஸ்வோக் மாகாண மக்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கைது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ரஷிய அதிபர் புதினுக்கு எதிராகவே இந்த போராட்டங்கள் பெரும்பாலும் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், போராட்டம் தொடர்ந்து 8-வது நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருவதால் ரஷியாவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையில், கவர்னர் செர்ஜி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் ஒரு வேளை நிரூபிக்கப்பட்டால் அவர் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.