ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்ட இங்கிலாந்து வாழ் இந்தியர் பெருமிதம் கொண்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர உலகம் முழுவதும் சுமார் 100-க்கு மேற்பட்ட தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அனைத்தும் தற்போது வரை சோதனையிலேயே இருந்து வருகிறது.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி இறுதி கட்டத்தை எட்டியதாக கூறப்படுகிறது. ஆக்ஸ்போர்டு 3-வது கட்ட பரிசோதனையாக மனித உடலில் தடுப்பூசியை செலுத்தியுள்ளது. இதன் முடிவு வெற்றிகரமாக அமைந்து விட்டால், இங்கிலாந்துதான் முதல் தடுப்பூசியை கண்டுபிடித்த நாடு என்ற பெருமையைப் பெறும்.
2-ம் கட்ட பரிசோதனையின் முடிவை அடுத்த வாரத்தில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஜெய்ப்பூரில் பிறந்த லண்டனில் வசித்து வரும் தீபக் பலிவால் என்பவர் தானாக முன்வந்து மனித உடலில் பரிசோதனை செலுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி சோதனையில், நானும் ஒரு பங்கு என்பது மகிழ்ச்சியான விஷயம் என்று தெரிவித்துள்ளார்.
ஆங்கில டி.வி. சேனல் இந்தியா டூடே-வுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் ‘‘எனது நண்பர் மூலம் தடுப்பூசிக்கு உட்படுத்த விரும்புனோர் தானாக வந்து விண்ணப்பிக்கலாம் என்பதை தெரிந்து கொண்டேன்.
ஒருவேளை தடுப்பூசி வெற்றி பெற்றால், அதில் கலந்து கொண்டது அதிர்ஷ்டம் என்பதால் எனது பெயரை பதிவு செய்தேன். ஒரு வாரம் கழித்து நான் தேர்வு செய்யப்பட்டேன்.
பரிசோதனைக்கு உட்படுத்த சம்மதம் தெரிவித்த நபர்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டனர். ஒரு குழவில் 500 பேர் இருந்தனர். அவர்களுக்கு சிங்கிள் ஷாட் செலுத்தப்பட்டது. அத்துடன் மூளைக்காய்ச்சல் தடுப்பூசியும் சிங்கிள் ஷாட் செலுத்தப்பட்டது.
500 பேரில் 10 நபர்களுக்கு டபுள் ஷாட் கொரோனா மருந்து செலுத்தப்பட்டது. அந்த 10 பேரில் நானும் ஒருவன். முதல் ஷாட் மே 11-ந்தேதி செலுத்தப்பட்டது. அதன்பின் பக்க விளைவு ஏதும் எற்படுகிறதா? என்பதை பார்க்க மூன்று மணி நேரம் என்னை கண்காணித்தார்கள். ஒரு வாரம் கழித்து டபுள் ஷாட் ஏற்றப்பட்டது.
பெரும்பாலான தடுப்பூசி போடும்போது ஏற்படும் காய்ச்சல் இந்த தடுப்பூசி போடும்போதும் உருவானது. தடுப்பூசி பரிசோதனையால் எனது நடைமுறை வாழ்க்கையில் எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. இது ஒரு பெரிய வெற்றியாக இருக்குமா? என்பது குறித்து நான் கவலைப்படைவில்லை. இந்த முயற்சியில் நான் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய பகுதியை நான் செய்துள்ளது மகிழ்ச்சி’’ என்றார்.