இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் இயல்பு நிலை திரும்பும்- போரிஸ் ஜான்சன்

251 0

இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் இயல்பு நிலை திரும்பும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக அதிகம் பாதிப்படைந்த நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்றைய தினம் 114 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை இங்கிலாந்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 233 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, “கடந்த சில வாரங்களாக, பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அடுத்து வரும் மழைக்காலத்தில் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதை, எதிர்கொள்ளும் வகையில் தேசிய சுகாதார திட்டத்திற்கு 3 பில்லியன் பவுண்டுகளை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கடந்த மார்ச் முதல் தேசிய அளவிலான கட்டுப்பாடுகளால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், தளர்வுகளை விரிவுபடுத்துகிறோம். இதனால் இயல்பு வாழ்க்கைக்கு நெருக்கமான ஒன்றை மீண்டும் பெற முடியும்.

கிறிஸ்துமஸ் சமயத்தில் இங்கிலாந்தில் இயல்பு நிலை திரும்பும் என்பது எனது வலுவான மற்றும் நேர்மையான நம்பிக்கையாகும். அடுத்து வரும் மாதங்களில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.