வீட்டுப்பாடம் செய்யாததால் 15 வயது மாணவிக்கு அமெரிக்க கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல நாடுகளிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
வீட்டுப்பாடம், தேர்வுகள் நடத்துவது ஆகியவை ஆன்லைனிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இதே போன்ற சூழ்நிலையில் அமெரிக்காவும் இணையதளம் மூலமாக பாடம் நடத்தப்படுகிறது. இந்தச் சூழலில் அமெரிக்க – ஆப்பிரிக்க இனத்தை சேர்ந்த கிரேஸ் என்ற 15 வயது சிறுமி வீட்டுப் பாடத்தை முடிக்கவில்லை என கூறி கடந்த மே மாதம் அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். நீதிபதியின் இந்த தீர்ப்பு அமெரிக்காவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாணவியின் வழக்கை விசாரித்த குடும்ப நீதிமன்றம், அந்த மாணவி வீட்டுப்பாடத்தை முடிக்காமல் நன்னடத்தை விதிகளை மீறி இருக்கிறார் என்றும், அவர் மீதுள்ள முந்தைய குற்றச்சாட்டுகளை வைத்து அவர் இந்த சமூகத்திற்கான அச்சுறுத்தல் என்றும் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்து வெளிப்படையாக எந்த கருத்தையும் நீதிபதி மேரி எல்லன் ப்ரெமென் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் வீட்டுப்பாடம் செய்யாத மாணவி ஒருவருக்கு சிறைத்தண்டனை விதித்த நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மிச்சிகன் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.