எங்களை நினைவில் வைத்திருங்கள்….
நாங்கள் மரணத்தைத் தழுவுவது எதற்காக என்பதை நினைவில் வைத்திருங்கள்….
மலர்வளையங்களைக் காட்டிலும் நினைவுச் சின்னங்களைக் காட்டிலும் முக்கியமானது இதுதான் –
எங்களை நினைவில் வைத்திருங்கள்….
நாங்கள் மரணத்தைத் தழுவுவது எதற்காக என்பதை நினைவில் வைத்திருங்கள்….
மரணத்தின் வாயிலில் நின்றுகொண்டிருந்த நிலையில் ஸ்பார்ட்டா மண்ணின் மாவீரன் லியோனிடாஸ் விடுத்த இந்த வேண்டுகோள் உலக விடுதலைப் போர் வரலாற்றில் அவனது ரத்தத்தால் மட்டுமே எழுதப்படவில்லை…. தங்கள் தாயகத்தின் சுதந்திரத்தைக் காக்க அவனுடன் களத்தில் நின்ற 300 பேரின் ரத்தத்தாலும் எழுதப்பட்டிருக்கிறது.
மாமன்னன் சேக்சஸின் பாரசீகப் பெரும் படையைத் தடுத்து நிறுத்த ஸ்பார்ட்டாவின் வெப்பவாயில் என்றே அழைக்கப்படுகிற தேமோபைலே கணவாயின் நுழைவாயிலில் மனிதச் சுவரென நின்றுகொண்டிருந்தவர்கள் லியோனியும் அவனது தோழர்களும்!
ஏசு பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவன் லியோனிடாஸ். மாவீரன் ஹெர்குலிஸ் மரபில் வந்த மாசற்ற வீரன் கிரேக்க நகர அரசுகளில் ஒன்றான ஸ்பார்ட்டா-வின் மன்னன். பல லட்சம் பேர் கொண்ட பாரசீகப் படையின் ஆக்கிரமிப்பைத் தடுக்க தேமோபைலே-வில் லியோனிடாஸுடன் நின்று கொண்டிருந்தவர்கள் 300 தோழர்கள் மட்டுமே!
பாரசீகப் படையை மட்டுமல்ல மரணத்தையும் எதிர்பார்த்துத்தான் தேமோபைலேவில் காத்திருந்தார்கள் லியோனிடாஸும் 300 வீரர்களும்! ஆழிப்பேரலை போல ஆர்ப்பரித்துவந்த பாரசீகப் பெரும்படையை எதிர்த்து நிற்பதற்கான ஓர்மமும் துணிவும் அவர்களுக்கு இருந்தது. விடுதலை அல்லது வீரமரணம் – என்கிற முடிவில் தெளிவாக இருந்தார்கள்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக லியோனியும் அவனது தோழர்களும் சாவைக் கண்டு அஞ்சவில்லை. பல லட்சம் பேரை உள்ளடக்கிய பாரசீகப் பெரும் படை அந்த 300 பேரைக் கண்டு அஞ்சி நடுங்கியதற்கு அந்த அச்சமின்மைதான் காரணம்.
லியோனிடாஸும் அவனது தோழர்களும் பாரசீகப் படையுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டிருக்க எந்த ஸ்பார்ட்டாவைக் காக்க தேமோபைலேவில் அவர்கள் நின்றார்களோ அந்த மண்ணில் முளைத்தெழுந்த துரோகம் லியோனியின் முதுகில் குத்தத் தயாராகிக் கொண்டிருந்தது. அந்தத் துரோகத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இறுதிவரை உறுதிகுன்றாமல் களத்தில் நின்றான் லியோனிடாஸ். அவனுக்குத் துணை நின்றார்கள் அந்த 300 தோழர்கள். சொந்த மண்ணில் துரோகம் செய்தவர்களுக்கும் சேர்த்தே போராடினான் ஸ்பார்ட்டாவின் மன்னன்.
இரக்கத்துக்கும் கருணைக்கும் தேவகுமாரன் ஏசுகிறிஸ்து அடையாளமென்றால் தாய்மண்ணைக் காக்கத் தன்னையே தாரைவார்த்த வீரத்தின் அடையாளம் லியோனிடாஸ்.
தேமோபைலே சமரில் லியோனிடாஸுடன் தோளோடு தோள் நின்ற ஸ்பார்ட்டா வீரர்களில் டிலியாஸ் ஒருவனைத் தவிர மற்ற அனைவருமே கொல்லப்பட்டு விட்டனர். அவன்தான் ‘எங்களை நினைவில் வைத்திருங்கள்’ என்கிற லியோனியின் இறுதிச் செய்தியோடு ஸ்பார்ட்டாவுக்குத் திரும்பியவன். அந்த மாவீரனின் செய்தியை மக்களுக்குத் தெரிவித்தவன்.
ஸ்பார்ட்டாவில் அந்த 300 மாவீரர்கள் சிந்திய ரத்தமும் முள்ளிவாய்க்காலில் எமது தமிழ்ச் சொந்தங்கள் சிந்திய ரத்தமும் வேறு வேறல்ல! வலியையும் வேதனையையும் மறைத்துவிட்டு சுதந்திர வேட்கையின் வலுவை மட்டுமே வரலாற்றில் எழுதுபவை.
தமிழரின் தாய்மண்ணைக் காப்பதற்காகவும் மீட்பதற்காகவும் சிங்கள ராணுவத்துடன் விடுதலைப் புலிகள் மோதிய எந்தக் களமும் தேமோபைலே சமருக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல!
ஸ்பார்ட்டாவைக் கைப்பற்ற வந்த பாரசீகப் படையைப் போலவே தமிழரின் தாய்மண்ணை ஆக்கிரமிக்க வந்த சிங்கள ராணுவமும் ஆள்பலம் ஆயுதபலத்தில் பலமடங்கு பெரியது. அதுபோதாதென்று உலக நாடுகளிடமெல்லாம் மடிப்பிச்சை எடுத்துப் பெற்ற இரவல் பலம் வேறு! அத்தனையும் புலிகளின் மனோபலத்தின் முன் தவிடுபொடியானது தனிக் கதை.
புலிகளுக்கு எதிரான பல சமர்களில் சிங்களச் சிங்கம் புறமுதுகு காட்டி ஓட வேண்டியிருந்தது. இரும்புக் கோட்டையாகவே இலங்கை வைத்திருந்த ஆனையிரவு முகாமைப் புலிகள் மீட்டபோது வெற்றிலைக்கேணியில் நின்றிருந்த கப்பலில் ஏறித் தப்பிப்பதற்காக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பின்னங்கால் பிடரியில் பட சிங்கள ராணுவம் ஓடியதுதான் இந்த நூற்றாண்டின் முதல் ‘மாரத்தன்’ ஓட்டம்.
அடிமேல் அடி வாங்கியபிறகு இந்தியாவின் மடியில் அமர்ந்துகொண்டே அதன் ஜென்ம விரோதியோடு கொஞ்சிக் குலவவேண்டிய கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டது இலங்கை. இந்த அருவருப்பான அரசியலை ‘ராஜந்திரம்’ என்றுவேறு அழைத்துக் கொண்டது அது.
லியோனிடாஸைப் போலவே பிரபாகரனும் பிரபாகரனின் தோழர்களும் நாடு பிடிக்கப் போரிடவில்லை….. சொந்தத் தாய்மண்ணை மீட்கவும் காக்கவுமே போராடினார்கள். சொந்த மக்களின் பாரம்பரிய அடையாளங்களைக் காக்கப் போராடினார்கள். உடன்பிறந்த சகோதரிகளைக் காப்பாற்றப் போராடினார்கள். தமிழர்களின் சுய கௌரவத்தைக் காக்கப் போராடினார்கள்.
‘ஒற்றை நாடு’ என்கிற பௌத்த சிங்களப் பேராசையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் – என்று இன்று ஒற்றைக்காலில் நிற்கிற தலைவர் பெருமக்களுக்கும் சட்டத் தரணிகளுக்கும் புலிகளும் பிரபாகரனும் யாரைக்காக்கப் போராடினார்கள் எதைக் காக்கப் போராடினார்கள் என்பதெல்லாம் தெரியுமா தெரியாதா?
தமிழர்கள் அடிமைச் சேவகம் செய்வதற்காகவே படைக்கப்பட்டவர்கள் – என்கிற மகாவம்ச மனநிலை கொடுமையானது தான்! அதைக் காட்டிலும் கொடுமையானது ‘உங்களில் யார் சிறந்த அடிமை’ என்று சிங்களப் பேரினவாதம் நடத்திய-நடத்துகிற போட்டிகளில் விரும்பிக் கலந்துகொண்ட-கலந்துகொள்கிற சில தலைவர் பெருமக்களின் மனோபாவம்.
பிரபாகரனின் தோழர்கள் அம்மி கொத்த வரவில்லை….. தங்கள் மண்ணின் சுதந்திரத்தைச் செதுக்க வந்தார்கள். சிங்களத் திமிருக்கு மஞ்சள் பூசி மனையில் தூக்கி உட்கார வைக்கிற மாமன் மச்சான் வேலைகளில் அவர்கள் ஒருபோதும் ஈடுபட்டதில்லை இனியும் ஈடுபடப் போவதில்லை.
லியோனிடாஸுக்கும் பிரபாகரனுக்கும் இடையே எந்த வித்தியாசத்தையும் பார்க்க முடியவில்லை. இருவரது இதயமும் தங்கள் தாயகத்துக்காகவே துடித்துக் கொண்டிருந்தது. விடுதலை – ஒன்றுதான் இருவரது கனவாகவும் உணவாகவும் இருந்தது.
தேமோபைலே சமரில் லியோனிடாஸுக்கும் அவனது தோழர்களுக்கும் எந்த இரண்டு தேவைப்பட்டதோ அந்த இரண்டும் புலிகளுக்கும் தேவைப்பட்டது. ஒன்று – அதிர்ந்துபோய் நிற்காத துணிவு. இன்னொன்று – அசந்துபோய்விடாத விழிப்பு.
சிங்கள ராணுவத்தின் பலமடங்கு பலத்தையும் பேரழிவு ஆயுதங்களையும் கண்டு அஞ்சாதிருத்தல் அவசியம்தான் என்றாலும் திருப்பித் தாக்கத் தயாராக இருப்பது அதைவிட அவசியம். இரண்டுமே இருந்தது புலிகளிடம்!
பிரபாகரனின் தோழர்களைக் கண்டு உலகே வியந்ததற்கு இதைக்காட்டிலும் முக்கியமான இன்னொரு காரணம் இருந்தது. அது அவர்கள் வெறும் போர்க் கதாநாயகர்கள் மட்டுமே கிடையாது என்பது! வெற்றி பெற்ற களங்களில் மட்டுமில்லாமல் வீழ்ந்த கணங்களில் கூட சோர்ந்துவிடாமல் போரிட்ட நிஜமான நாயகர்களாகத் திகழ்ந்தார்கள் அவர்கள். வெற்றியடைந்ததும் துள்ளிக் குதிக்கவுமில்லை வெற்றிவாய்ப்பை இழந்த தருணங்களில் துவண்டுவிடவுமில்லை.
மிக மிக பக்குவமான முதிர்ச்சியடைந்த மனநிலை இது. உலக வரலாற்றில் ஆயுதமேந்திப் போராடிய விடுதலை இயக்கங்களில் விடுதலைப் புலிகளிடம் மட்டுமே இந்த முதிர்ச்சியைப் பார்க்க முடிகிறது. வெற்றிமீது வெற்றிகளைக் குவித்தபோது புலிகள் அதை ஆரவாரமாகக் கொண்டாடியதாக நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?
‘மெய்த்திருப்பதம் மேவு என்ற போதிலும்
இத் திருத் துறந்து ஏகு என்ற போதிலும்
சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும் முகத்தினை உண்ணுவாள்’ என்கிறான் கம்பன். அரியணையில் அமரச்சொன்னபோது எப்படி இருந்ததோ அப்படியே இருந்ததாம் ராமனின் முகம் – ‘காட்டுக்குப் போ’ என்று தந்தை கட்டளையிட்டபோதும்! அதைப் பார்த்து வியக்கிறாள் சீதை.
ராமாயணம் என்கிற வடமொழிக் கற்பனையைத்தான் தமிழ்ப்படுத்துகிறான் கம்பன். ஒரு கற்பனைக் காவியத்தின் நாயகனை ஒப்புவமையற்ற பேருருவாகக் காட்ட முயல்கிறான். கதையிலும் கற்பனையிலும் இப்படியெல்லாம் சித்தரிப்பது சாத்தியம்தான்! நிஜத்தில் உவகையையும் துயரையும் சரிசமமாக பாவிக்கிற மனநிலை எவருக்கும் சாத்தியமில்லை. இந்த யதார்த்த நிலைக்கு விதிவிலக்காக இருந்தவர்கள் லியோனிடாஸும் பிரபாகரனும்!
விடுதலைப் போராட்டக் களம் ஒவ்வொன்றும் தேமோபைலே கணவாய் போன்றதுதான்! அதன் முரண்களும் ஒரே மாதிரியானவை. இந்தச் சமர்களில் தோல்வியடைகிறவர்கள் யாரோ – அவர்கள்தான் உண்மையில் வெற்றி பெறப் போகிறவர்கள்.
இந்தப் பேருண்மையை நிரூபிக்கத்தான் ஸ்பார்ட்டாவின் வீரர்களைப் போல பிரபாகரனின் தோழர்களைப் போல சில நூறு பேரோ பல ஆயிரம் பேரோ தங்கள் இனத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கத் தாமாக முன்வந்து பேராண்மையுடன் உயிர் துறக்கிறார்கள் ஒவ்வொரு முறையும்! அவர்கள் வீழ்த்தப்பட்டு விட்டதாகச் சொல்வது அபத்தத்திலும் அபத்தம்.
உடல்வலுவாலும் போர்த்திறனாலும் பெரும்படையாலும் கொலைவெறித்தாக்குதலாலும் மற்ற நாடுகளையும் மற்ற இனங்களையும் நசுக்கி வெற்றிகளைக் குவித்த வீரதீரபராக்கிரமசாலிகள் ஒருவர் இருவரல்ல….. பாரசீகப் பேரரசன் சேக்சஸ் மாதிரி எத்தனையோ பேர்! இரக்கமேயில்லாத அந்த அரக்கர்கள் குறித்து விளக்கமாகப் பேசுகிறது வரலாறு. என்றாலும் அவர்களுடைய பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் வரலாற்றின் பக்கங்களில் பிணவாடை தான் அடிக்கிறது இப்போதும்!
வெற்றிமேல் வெற்றியைக் குவித்திருந்தும் ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என்பதுதான் இன்றுவரை அவர்களது அடையாளம். வரலாறு ஒருபோதும் அவர்களை உன்னதமான இடத்தில் வைத்ததில்லை. அந்த இடம் ஸ்பார்ட்டாவின் வீரர்களைப் போல் விடுதலைப் புலிகளைப் போல் சொந்தத் தாய்மண்ணைத் தங்கள் ரத்தத்தாலேயே சுத்திகரித்திருக்கும் அர்ப்பணிப்பாளர்களுக்கு மட்டுமே உரியது.
ஆள்பலமும் ஆயுதபலமுமே முடிவைத் தீர்மானிக்கும் போர்க்களங்களில் லியோனிடாஸ் போன்ற அப்பழுக்கற்ற வீரர்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதெல்லாம் அர்த்தமற்ற கேள்விகள்.
பிறந்த மண்ணைக் காப்பதற்கான போரில் வென்றவர்கள் மட்டுமில்லை…. வீழ்ந்தவர்களும் வரலாற்று நாயகர்கள் தான்! அவர்கள் புதைக்கப்படுகிற இடத்தில் தான் விடுதலை விதைக்கப்படுகிறது. எதற்காகப் போரிட்டார்கள் என்பதை வைத்தே வீரர்களின் பெறுமதி அளவிடப்படுகிறது…. வெற்றி தோல்விகளை வைத்து அல்ல! இதற்கான வரலாற்றுச் சான்று – ஸ்பார்ட்டா!
விடுதலைப் புலிகள் எப்படி வன்னி மண்ணின் அடையாளமாகத் திகழ்கிறார்களோ அதேமாதிரி ஸ்பார்ட்டாவின் அடையாளமாக இன்றுவரை திகழ்வது – லியோனிடாஸும் அவனது 300 தோழர்களும்தான்!
15 ஆண்டுகளுக்கு முன் ஆக்ராவிலிருந்து டெல்லிக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது பேருந்தில் எனக்கு சக பயணியாக வாய்த்த ஹைட்டன் என்கிற இஸ்ரேலிய இளைஞன் கேட்ட ஒரு கேள்வியை இப்போதுகூட என்னால் மறக்க முடியவில்லை.
என் உடை அந்த யூத இளைஞனுக்குப் பிடித்திருந்தது. வேட்டி கட்டுவது எப்படி – என்று என்னிடம் கேட்டுத் தெரிந்துகொண்டான். ‘இந்தியாவில் நீ எந்தப் பகுதி ஆள்’ என்று அவன் ஆர்வத்துடன் கேட்க ‘தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் தமிழன்’ என்றேன்.
தமிழன் என்று நான் சொன்னதும் ஹைட்டனின் விழிகள் வியப்பில் விரிந்தன. ‘நீ பிரபாகரனின் இனமா’ (Are you belongs to Pirabakaran’s community) என்று ஒரு ஓட்டை ஆங்கிலத்தில் அவன் கேட்டபோது சிலிர்த்துவிட்டேன். சாதிகளாலும் மதங்களாலும் பிரிந்தே கிடக்கிற நம்மை பிரபாகரன் என்கிற ஒற்றைப் பெயர் தமிழனாக இணைத்திருப்பது குறித்த அந்த வியப்பிலிருந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் என்னால் விடுபடமுடியவில்லை.