கூட்டமைப்பின் ஆசனங்களை பறிக்கவே பலரும் களமிறங்கியுள்ளனர் – கமலநேசன்

255 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு தமிழ் பிரதிநிதித்துவ ஆசனத்தினை இல்லாமல் செய்வதற்கு தற்போதைய அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகள் களமிறங்கப்பட்டுள்ளனர் என வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்தார். மேலும்,

“வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்க வேண்டும் என்பதற்காக தற்போதைய அரசாங்கத்தின் உதவி மூலம் சில கட்சிகளும், பல சுயேட்சைக் குழுக்களும் களமிறங்கப்பட்டுள்ளது. இவர்களால் எந்தவித ஆசனத்தையும் பெறமுடியாது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தற்கால அரசியல் சூழ்நிலையில் நான்கு ஆசனம் பெறுவதற்குரிய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. ஆனால் அதனை பிரித்து மாற்று சமூகத்திற்கு வழங்கும் பணியில் தமிழ் பிரதிநிதிகள் களமிறங்கியுள்ளனர். இந்த விடயமானது எமது சமூகத்திற்கு செய்யும் பாரிய துரோகச் செயலாகவே நாம் கருத வேண்டியுள்ளது.

மாறாக எஞ்சி இருக்கின்ற தமிழ் தேசிய வாதிகளையும் எமது கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பினையும் இல்லாமல் செய்வதற்கும் தமிழர் தாயக நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்து கிழக்கு பகுதியில் தொல் என்ற பெயரில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினை மேலோங்கச் செய்வதற்காகவுமே எமது மாவட்டத்திலுள்ள அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகள் ஒப்பந்தம் செய்து கொண்டு வந்துள்ளார்கள் என்பதை மக்கள் மறந்து விடக் கூடாது.” – என்றார்.