பல்கலைக்கழகம் போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிவில் நிறுவனங்களின் சுயாதீன தன்மை இராணுவ நலன்களுக்கு மேலானது அல்ல என்ற நிலையே இந்த நாட்டில் காணப்படுகின்றமையை யாழ் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி குருபரனின் ராஜினாமா எடுத்துக்காட்டுவதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் கவலையும் விமர்சனமும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி முறிகண்டியில் உள்ள சாந்தபுரத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் இவ்வாறு தெரிவித்த விக்னேஸ்வரன், இதேபோன்ற ஒரு நிலைமை தான் யாழ் பல்கலைக்கழக உபவேந்தராகப் பதவி வகித்திருந்த பேராசிரியர் ரட்னம் விக்னேஸ்வரன் திடீரென பதவி விலக்கப்பட்டபோதும் நடைபெற்றிருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
“தமிழ் சமூகத்தின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தின் முதுகெலும்பாக காணப்படும் பல்கலைக்கழகத்தை பலவீனப்படுத்தும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக போராடுவதை காட்டிலும் தமிழ் மக்களுக்கு எதிராக பிரஜாவுரிமை நீக்கம், தரப்படுத்தல், சிங்களம் மட்டும், பயங்கரவாத தடை சட்டம் ஆகியவற்றை இயற்றிய இலங்கை பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதே தமது தலையாக கடமையாக கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டிருக்கிறது.” என்று இந்த இரண்டு சம்பவங்களுக்கும் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது அரசியல் அதிகாரம் மற்றும் செல்வாக்கு ஆகியவற்றை பயன்படுத்தி செயற்பட்டிருக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.
அவர் மேலும் பேசுகையில்,
வட கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில் இந்தத் தேர்தல் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையிலான தேர்தல். உரிமை அரசியலுக்கும் சலுகை அரசியலுக்கும் இடையிலான தேர்தல். தமிழ் தேசிய அரசியலுக்கும் தமிழ் தேசிய நீக்க அரசியலுக்கும் இடையிலான தேர்தல். உண்மை, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் நாம் இந்தத் தேர்தலை எதிர்கொள்கின்றோம். ஒரு தனி மனிதனின் விருப்பு வெறுப்புக்களின் பால் அல்லாமல் புத்திஜீவிகள் பலரையும் உள்வாங்கி நன்கு ஆராய்ந்து கூட்டு முடிவுகளை எடுத்து நாம் செயற்படவிருக்கின்றோம். அதற்கு ஏற்ப கட்டமைப்புக்கள் உருவாக்கப்படுவன. அதற்கான அங்கீகாரத்தைக் கோரியே எமது மக்களான உங்களிடம் வாக்குக் கேட்டு வந்திருக்கின்றோம். எமக்கு அதிகாரம் நீங்கள் வழங்கினால்த்தான் நாங்கள் உங்களுக்கு சேவை செய்ய முடியும்.
தனித்து தேர்தலை எதிர்கொள்வது மக்களின் வாக்கை சிதறடிப்பதற்கு வழிகோலாதா என்று சிலர் கேள்வி கேட்கின்றர்கள். நாங்கள் தனித்துக் கேட்கவில்லை. ஐந்து கட்சிகள் கூட்டணியாகவே கேட்கின்றோம். ஆனால், அவர்களிடம் நான் கேட்க விரும்புவது என்னவெனில், கடந்த காலத்தில் 15, 22 என பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கொடுத்து எதனை சாதிக்க முடிந்தது? சென்ற தடவை 100 சதவீதம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை எமது மக்கள் தெரிவுசெய்திருந்தால் என்ன நடந்திருக்கும்? ஒற்றை ஆட்சிக்கும், பௌத்தத்தின் முன்னுரிமைக்கும், வடக்கு-கிழக்கு பிரிப்புக்கும் தமிழ் மக்கள் 100 சத வீத அங்கீகாரம் கொடுத்துவிட்டார்கள் என்றல்லவா ஆகியிருக்கும்.? வாக்காளர்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும். அத்துடன், பல தடவைகள் ஆட்சிகவிழ்ப்புக்கள் நடந்தபோது எமது உறுப்பினர்களின் ஆதரவு இன்றி ஆட்சியமைக்க முடியாது என்ற நிலை வந்த போது எம்மக்களுக்கு எதனை அவர்கள் பெற்றுக்கொடுத்தார்கள்? குறைந்தது எமது தமிழ் அரசியல் கைதிகளையாவது விடுவித்துக் கொடுத்தார்களா? எமது மக்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு எல்லாமே கிடைத்தது. எமது தலைவர்களுக்கு பதவிகளும் பகட்டுகளும் கிடைத்தன. இதனால்த்தான் பாராளுமன்றம் செல்பவர்கள் ஒருவர் இருவரானாலும் எமது மக்களுக்காக உண்மையாக நேர்மையுடன் உழைப்பவர்களாக இருக்கவேண்டும் என்று கருதுகின்றோம். எமது மக்களின் பிரதிநிதிகளாக போலியாகத் தம்மைச் சித்திரித்து இவர்கள் அரசாங்கத்தின் முகவர்களாக செயல்படுவதைத் தடுப்பதற்காக நாம் களம் இறங்கியுள்ளோம்.
அதேவேளை ஏற்கனவே கூறியவாறு நாம் தனித்து இந்த தேர்தலில் இறங்கவில்லை. வடக்கு கிழக்கைச் சேர்ந்த 5 கட்சிகளின் கூட்டாகவே இறங்கியுள்ளோம். இது பலமான ஒரு கூட்டணி. தமிழ்த் தேசிய கூட்டமைப்பை விட பலமான பெரிய கூட்டணி. மேலும் ஒத்த கொள்கையுடைய சில கட்சிகளை இணைப்பதற்கு முயன்றிருந்தோம். அவர்களின் சுயநலம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. அதேவேளை, வாக்குகளைப் பிரிப்பதற்காக என்றே சில சக்திகள் திட்டமிட்டுப் பலரை வட-கிழக்கில் இறக்கியிருக்கின்றார்கள். நாங்கள் தேர்தலில் முன்னிற்காவிட்டாலும் கூட இது நடைபெற்றிருக்கும். மூன்று வருடங்களில் ஒரேயொரு தடவை பாராளுமன்றத்தில் பேசுவோர் போன்ற 15 பேரை விட மக்கள் மீது கரிசனையுடைய ஒருவரே சிறந்தவர். அம்பாறையில் நாம் போட்டியிடாமைக்கு வாக்குகளைப் பிரிக்கக்கூடாது என்பதே காரணம். எம் மக்கள் எங்களுக்கு அமோக வெற்றியை ஈட்டித் தந்தால் நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய அரசியல் கலாசாரத்தை முற்றாக மாற்றி விடுவோம்.
அன்புக்குரிய மக்களே.
நீங்கள் யாவரும் ஆகஸ்ட் 5 அன்று கட்டாயமாக வாக்களிப்பது மிகவும் அவசியம். அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். நீங்கள் வாக்களிப்பதை தடுப்பதற்கு பல்வேறு சூழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கொரோனா பற்றி உளவியல் ரீதியாக மக்களை அச்சுறுத்தி வாக்களிப்பை குறைக்க பல்வேறு ஏற்பாடுகள் நடைபெறுவதை நாம் அவதானிக்கின்றோம். அளவுக்கு அதிகமாக இராணுவம் இங்கு கொண்டுவரப்படுகின்றது. புதிய அறிவிப்பாக குற்றச் செயல்களை தடுத்தல் என்ற போர்வையில் கிராம உத்தியோகத்தர் மட்டத்தில் மூன்று இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இராணுவ மயமாக்கல் தீவிரம் அடைந்துள்ளது.
கொரோனா தீவிரமாக பரவுவதற்கு தொற்று நோய் தடுப்பு முறை இராணுவ மயமாக்கப்பட்டதும், அரசியல் இலாபத்தை ஈட்டும் நோக்கில் அரசாங்கம் செயற்பட்டமையுமே காரணமாகும் என இப்போது தெரிய வந்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டுப் பொறுப்பு முற்றுமுழுதாகச் சுகாதார துறையினரிடம் வழங்கப்பட்டு விஞ்ஞான ரீதியிலான நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டிருக்கவேண்டும். ஆரம்பத்தில் இருந்தே இது நடந்தேறியிருக்க வேண்டும்.
யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி குருபரன் குமரவடிவேல் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் அளவுக்கு இராணுவத்தினரின் செல்வாக்கு பின்னனி காரணமாக இருப்பது எத்தகைய ஒரு ஆபத்தான நிலைமைக்குள் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை காட்டுகின்றது.
1996ஆம் ஆண்டு யாழ் நாவற்குழியில் காணாமல்போன 24 இளைஞர்களில் மூன்று இளைஞர்களின் ஆட்கொணர்வு மனுத் தொடர்பான விசாரணையில் பாதிக்கப்பட்ட உறவினர்களின் சார்பில் கலாநிதி குருபரன் முன்னிலையாகி இருந்தமையை இராணுவம் விரும்பி இருக்காமை அவர் தனது பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு கொண்டுவந்திருக்கிறது.
யாழ் பல்கலைக்கழகச் சட்டத்துறை விரிவுரையாளர் ஒருவர், எந்த அடிப்படையில் வழக்கு ஒன்றில் முன்னிலையாக முடியுமென இலங்கை இராணுவத் தரைப்படையின் சட்டப் பணிப்பாளர் ஈஎஸ்.ஜயசிங்கே கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி கொழும்பில் உள்ள பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு அனுப்பியிருந்த கடிதம் ஒன்றில் கேள்வி எழுப்பியிருந்தார். இதனையடுத்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அழுத்தத்துக்கு அமைய யாழ் பல்கலைக்கழக பேரவை குருபரன் சட்டத்தொழிலில் ஈடுபடுவதற்கு தடை செய்திருந்தது.
உலகின் ஏனைய நாடுகளில் இப்படியான ஒரு நிலைமை இல்லாதபோதிலும் முற்றுமுழுதாக இராணுவ நலன்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளித்து மேற்கொள்ளப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு பல்கலைக்கழக பேரவை அடிபணிய நேர்ந்திருக்கிறது. பல்கலைக்கழகம் போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிவில் நிறுவனங்களின் சுயாதீன தன்மை இராணுவ நலன்களுக்கு மேலானது அல்ல என்ற நிலையே இந்த நாட்டில் காணபப்டுகின்றமையை காட்டுகின்றது.
அதேவேளை, மறுபுறத்தில் எந்தளவுக்கு மக்கள் நலன்களுக்கு எதிரான அநீதிகள் மற்றும் தவறுகள் நடக்கப்டும்போது அவற்றுக்கு எதிராக போராடும் மனோபாவத்தையும் ஆற்றலையும் எமது சமூகம் இழந்துநிற்கிறது என்பதையும் குருபரனின் ராஜினாமா எடுத்துக்காட்டுகின்றது. இதேபோன்ற ஒரு நிலைமை தான் யாழ் பல்கலைக்கழக உபவேந்தராகப் பதவி வகித்திருந்த பேராசிரியர் ரட்னம் விக்னேஸ்வரன் திடீரென பதவி விலக்கப்பட்டபோதும் நடைபெற்றிருந்தது. அவரது பதவி விலக்கலுக்கு பின்னாலும் இராணுவத்தினரின் கை இருந்தது.
இந்த இரண்டு சம்பவங்களின் போதும் ஏற்பட்ட அநீதிகளுக்கு எதிராக போராடும் ஆற்றலை பல்கலைக்கழக சமூகம் இழந்தமைக்கும் தமிழ் மக்களின் எதிர்காலத்தை மிக மோசமாக பாதிக்கப்போகும் பிழையான முன்னுதாரணங்களாக இவை அமைவதற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பே முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும்.
இந்த இரண்டு சம்பவங்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தயவில் இருந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே நடைபெற்றிருந்தன. முன்னாள் துணைவேந்தர் பேராசிரிய விக்னேஸ்வரன் நீக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டபோது பொறுப்புமிக்க எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் அதேவேளை அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்தும் வந்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த எதிர்ப்பையும் காட்டாமல் மறைமுகமாக இந்த நடவடிக்கையை ஆதரித்திருந்தன. அதேபோலவே, குருபரன் விடயத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது அரசியல் செல்வாக்கை ஒரு அநீதியை ஒரு தவறை தடுப்பதற்காக பயன்படுத்தவில்லை.
தமிழ் சமூகத்தின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தின் முதுகெலும்பாக காணப்படும் பல்கலைக்கழகத்தை பலவீனப்படுத்தும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக போராடுவதை காட்டிலும் தமிழ் மக்களுக்கு எதிராக பிரஜாவுரிமை நீக்கம், தரப்படுத்தல், சிங்களம் மட்டும், பயங்கரவாத தடை சட்டம் ஆகியவற்றை இயற்றிய இலங்கை பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதே தமது தலையாக கடமையாக கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டிருக்கிறது.
கலாநிதி குருபரன் மீண்டும் யாழ் பல்கலைக்கழகத்தில் இணையும் நிலைமையும் அதேவேளை தனது சட்ட தொழிலையும் செய்யும் நிலைமையும் விரைவில் உருவாகும் என்று நம்புகின்றேன்.
இராணுவத்தை வெள்ளையடிப்பதற்காக சிவில் நிர்வாக வேலைகளுக்குள் இளைப்பாறிய இராணுவத்தினரைக் கொண்டுவராதீர்கள் என்று கடந்த காலங்களில் பல தடவைகள் நான் வலியுறுத்தியிருந்தேன். இராணுவமயப்படுத்தல் என்பது இந்த நாட்டை மிகமோசமான நிலைக்கு கொண்டுசெல்லப்போகின்றது. இதனை எமது சிங்களச் சகோதரர்கள் விரைவில் உணர்ந்துகொள்வார்கள்.