வவுனியாவினில் போலி விஞ்ஞானியான சர்ச்சைக்குரிய நபரான என்.என்.ஜக்சன் கைது

363 0

untitledவவுனியாவினில் போலி விஞ்ஞானியாக அடையாளப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய நபரான என்.என்.ஜக்சன் என்பவர் மீண்டும் யாழில் வைத்து கைதாகியுள்ளார். முன்னதாக நிதி மோசடி தொடர்பில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அவர் தற்போது யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் செய்திகளை வெளியிட்டதாகக் கைதாகியுள்ளார்.

விசாரணை தவணையொன்றிற்காக வந்திருந்த அவர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு வெளியில் வைத்து நேற்று புதன்கிழமை கைதாகியிருந்தார். யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தனது முகப்புத்தகம் ஊடாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை கடுமையாக விமர்சனம் செய்து வந்திருந்தார்.

இரண்டு மாணவர்கள் சுட்டுகொலை செய்யப்பட்டதற்கு நீதிபதி இளஞ்செழியன் பதில் கூறவேண்டுமென அவர் வலியுறுத்தியிருந்தார். 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அகில இலங்கை தமிழர் மகா சபை எனும் இராணுவபுலனாய்வு அமைப்பினால் புத்துயிர் ஊட்டப்பட்ட அமைப்பு சார்பில் வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்திருந்தார்.பின்னராக பல கோடி வருமானம் ஈட்டிய விஞ்ஞானியென கூட்டமைப்பு கட்சி பத்திரிகையொன்றால் கொண்டாடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.