இராணுவத்தை மீறி வடக்கில் எதனையும் செய்ய முடியாது என்பதை சட்டத்தரணி குருபரனின் விடயம் உறுதிப்படுத்தியுள்ளதாக வவுனியாவில் தொடர்போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்.
அவர்கள் தெரிவிக்கையில், “இலங்கையில் ஜனநாயகம் நிலவுவதாக சுமந்திரனும் சம்பந்தனும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த நாடு அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இராணுவமயமாக்கத்திற்குள் சென்று பல ஆண்டுகள் கடந்துவிட்டன.
குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் இராணுவத்தை மீறி கல்வி, நிர்வாகம், அபிவிருத்தி என எதனையும் செய்யமுடியாத நிலைதான் நீடிக்கின்றது. அதன் மொத்த விளைவைத்தான் யாழ். பல்கலைக்கழக சட்டத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான கலாநிதி குமாரவடிவேல் குருபரன் விடயத்தில் நடந்தது.
சட்டத்தரணி குருபரன் பல்கலைக்கழகத்தில் பணியாற்ற முடியும், ஆனால் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட தமிழருக்காக வாதாட முடியாது. இது நீதி நியாயத்திற்கு எதிரானது.
பேராசிரியர் பீரிஸ் சட்டப் பள்ளியில் கற்பித்தபோது, அவர் நீதிமன்றத்தில் பல வழக்குகளில் ஆஜராகி இருந்ததை நாம் அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும்.
அரசாங்கத்தால் திருத்தப்பட்ட அல்லது புதிதாக உருவாக்கப்பட்ட தொடர்பாக பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு மட்டுமே நன்றாகத் தெரியும். அது மட்டுமல்லாது உலகின் பிற பகுதிகளில் நீதிமன்றத்தில் ஒரு முக்கியமான சட்டவாதத்தை விவாதிக்க வேண்டியிருக்கும் போது, அவர்கள் சட்ட பேராசிரியர்களைத்தான் அழைத்து வருகிறார்கள். மேலும் புதிய சட்டத்தை எவ்வாறு விளக்குவது என்பது பல்கலைக்கழக பேராசிரியர்களுக்குத்தான் தெரியும்.
இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் அனைவரும் ஒருமித்து செயற்படவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அத்துடன், படித்த விலை போகாத தலைமைகளை நாம் முன்கொண்டுவர வேண்டும். அதற்கான மக்கள் ஆதரவு தற்போது வந்துள்ளது. மாற்றம்தான் தமிழர்களுக்கான தீர்வாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.