சிறிலங்காவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு வாரகால விடுமுறை மேலும் ஒரு வார காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய பாடசாலைகளை மீண்டும் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.
குறித்த தினத்தில் தரம் 11, 12 மற்றும் 13ஆம் தர மாணவர்களுக்காக மாத்திரமே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலின் பின்னர் வரும் முதலாம் திங்கட்கிழமையான ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஏனைய தர மாணவர்களுக்காக பாடசாலைகளை திறப்பது பொருத்தமானது என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இராஜாங்கனை மற்றும் வெலிகந்த கல்வி வலையங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதிக்க முன்னர் திறக்கப்படாது என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேநேரம், கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகள் நடத்தப்படும் தினம் தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த வாரம் முதல் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்ததைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரையில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, கற்றல் செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுப்பதற்கான கால எல்லை மற்றும் தினம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக சுகாதார அமைச்சிடம் கல்வி அமைச்சு கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.