தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது!

254 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2020ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்றையதினம் (18) யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது.

குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வ இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் கட்சியின் தலைவரும் யாழ் தேர்தல் மாவட்டத்திற்கான முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றது.

விஞ்ஞாபனம் வருமாறு,

  1. வரலாற்றுப் பின்னணி

அந்நியர் ஆட்சியிலிருந்து 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்ற போது சாதாரண பெரும்பான்மை ஆட்சி முறையிலான ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறையொன்று இங்கு பலவந்தமாகத் திணிக்கப்பட்டது. 1949 ஆம் ஆண்டில் இந்திய வம்சாவளித் தமிழர்களில் கணிசமான எண்ணிக்கையிலானோரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இச் சமகாலத்திலேயே அரச ஆதரவுடன் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில்;, பெரும்பான்மை இனத்தவர்களைக் குடியேற்றும் திட்டங்கள் தீவிரமடைந்தன. இச் செயற்பாடுகளை எதிர்த்தனால் ஏற்பட்ட அரசியல் எழுச்சி காரணமாக 1949 டிசம்பர் மாதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தோற்றம் பெற்றது.

1951 ஏப்ரல் மாதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ‘தமிழ்; மக்கள் ஒரு தேசிய இனத்திற்குரிய அனைத்து அம்சங்களையும் கொண்டவர்கள் என்பதால் தமிழர் ஒரு தனித்துவமான தேசிய இனமெனவும், அந்த அடிப்படையில் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள்’ என்கின்ற தனது அரசியற்கோட்பாட்டினை முன்வைத்தது. இந்த உரிமையை செயற்படுத்தவென தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு-கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தன்னாட்சி ஏற்பாடொன்றை இலங்கைத் தமிழரசுக் கட்சி கோரிநின்றது.

தமிழ் மக்களின் சம்மதமின்றி நிறைவேற்றப்பட்ட முதலாம் மற்றும் இரண்டாம் குடியரசு யாப்புக்கள் இரண்டுமே ஒற்றையாட்சி அரசமைப்பை உறுதிப்படுத்தியதுடன் சிங்கள மொழியினை மாத்திரமே ஒரே அரச கரும மொழியாகக் கொண்டு செயற்படவும்; தொடர்ந்தும் பௌத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை வழங்கவும் வழிவகுத்திருந்தன. 1948ல் இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து தமிழ் மக்களின் வரலாற்று வாழ்விடமாகிய வடக்கு-கிழக்கின் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் முனைப்புடன் திட்டமிட்ட அரச ஆதரவுச் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றன. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற பின்னர் வடக்கு-கிழக்கில் இது முழு முனைப்புடன் தொடர்ந்தது.

1956, 1958, 1961, 1977, 1981 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளிலும், அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாகவும் தமிழ் மக்களுக்கெதிரான திட்டமிட்ட வன்முறை, இனக்கலவரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டது. அரசு எவ்வித பாதுகாப்பையும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்கவில்லை. இச் சந்தர்ப்பங்களில் நாட்டின் ஏனைய பாகங்களில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் நிலம், கடல் மற்றும் வான் வழியாக வடக்குக் கிழக்கிற்கு அன்றைய அரசாங்கங்களினால் அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் மூலம் இவ்விரு மாகாணங்களையும்; தமிழர் தம் தாயகமாகவும் அங்குதான் தமிழர்களுக்கு பாதுகாப்பு உண்டு எனவும் அரசாங்கமே ஏற்றுக்கொண்டது. ஆனால் தற்போது வடக்கு கிழக்கிலும் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதே நிலைமை.

  1. அரசியல் தீர்வு

தமிழ் அரசியல் தலைமையானது தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு; பெருமளவு தன்னாட்சி அதிகாரத்தினை வழங்கும் ஒரு மாற்று அரசியல் ஏற்பாட்டினை பெற காலங்காலமாக பல முறை முயற்;சி செய்தது. அடுத்தடுத்து ஆட்சி செய்த அரசாங்கங்களுடன் பல முயற்சிகளில் ஈடுபட்டிருந்தாலும் தேசிய இனப்பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாதிருக்கின்றது. 2002 பெப்ரவரி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளும் அன்றைய இலங்கை அரசாங்கமும் போர் நிறுத்த ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டதோடு, 2002 டிசம்பரில் ஏற்பட்ட ‘ஒஸ்லோ’ உடன்படிக்கையில் சில அடிப்படைக் கோட்பாடுகளின் மீது இணக்கம் கண்டன. அக் கோட்பாடு பின்வருமாறு அமைந்தது.

“ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளில் உள்ளக சுயநிர்ணய உரிமைக் கொள்கையின் பிரகாரம் சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையிலமைந்த தீர்வொன்றை ஆராய்தல்.”

சர்வதேச நியமங்களின் படியும், சர்வதேச சாசனங்களின் பிரகாரமும் தமிழர்களாகிய நாங்கள் தனிச் சிறப்புமிக்க மக்கள் குழாமாவோம். ஒரு மக்கள் குழாமான நாங்கள்பேரினவாதத்தின் பிடிக்கு ஆட்படாது கௌரவத்துடனும் சுயமரியாதையுடனும், சுதந்திரமாகவும், அச்சமின்றியும், நாட்டின் ஏனைய மக்களுடன் சமத்துவமுள்ள மக்களாக வாழ விரும்புகின்றோம்.

இதனால், தனித்துவமான மக்களாகவும், தேசிய இனமாகவும் நாம் எமது வரலாற்று ரீதியான வாழ்விடங்கள் தொடர்பிலும், எமக்குரிய எமது ஒருமித்த உரிமைகள் தொடர்பிலும், மேலும் எமது தலைவிதியை அல்லது எதிர்காலத்தை நாமே தீர்மானிப்பதற்கு எமக்கிருக்கும் உரிமை தொடர்பிலும், அதை உறுதிப்படுத்த ஒன்றுபட்டதும், பிளவுபடாததுமான இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்கள் வாழும் வடக்கு-கிழக்கில் தக்க தன்னாட்சி முறைமை ஒன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் திடசங்கற்பம் கொண்டிருக்கின்றோம்.

இவை தொடர்பிலான தற்போதைய அரசியலமைப்பு ஏற்பாடுகள் பொருத்தமற்றதாகவும், திருப்தியற்றதாகவும் அமைந்துள்ளன. தற்போதுள்ள ஏற்பாடுகள் பெரும்பான்மை மக்களுக்குச் சார்பானதாகவும், அவர்களது ஆதிக்கத்தை தமிழர் மீது திணிக்கும் வகையிலுமே அமைந்துள்ளன. நீதி, சமத்துவம், சமாதானம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்தும் ஓர் அரசியலமைப்புக் கட்டமைப்பின்றி பல்லின சமூகமொன்றில் ஜனநாயகம் செயற்பட முடியாது.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்திடம் “13 ஆம் திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்தி அதற்கு மேலாக அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை கட்டியெழுப்பும்” என தொடர்ந்து உறுதிமொழியளித்தது. இவ் வாக்குறுதிகளுக்கமைய 13 மார்ச் 2015ல் இந்திய பிரதமர் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதுபின்வருமாறு கூறினார்:

“எமது சமூகத்திலுள்ள அனைத்து பாகங்களின் அபிலாi~களுக்கு நாம் மதிப்பளிக்கும் போது, எம் நாட்டின் ஒவ்வொரு பிரஜையின் சக்தியையும் எமது நாடு உள்வாங்கிக்கிக்கொள்ளும். மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் கிராமங்களை இவ்வாறு வலுவூட்டப்படும் பொழுது நாடு மென்மேலும் மேம்படும்.

கூட்டுறவு சம~;டியில் நான் திடமான நம்பிக்கை கொண்டவன்” என்பதையும் குறிப்பிட்டார்.

இறையாண்மை என்பது மக்களிடமே உண்டு, அரசிடம் அல்ல எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக வலியுறுத்துகின்றது. தமிழ் மக்களை ஆளுகின்ற உரிமை கொழும்பிலிருக்கும் அரசாங்கத்திடமல்ல, தமிழ் மக்களிடமே பொதிந்திருக்கின்றது. இதனடிப்படையில், மத்திய அரசிடமும் அதன் முகவரான ஆளுநரிடமும் அதிகாரங்களைக் குவிக்கின்ற 13 ஆம் திருத்தச் சட்டம் முற்றிலும் பிழையானதொன்று. ஏதேச்சாதிகார அரசிற்கு விடுக்கும் அடிப்படை ஜனநாயகச் சவாலின் மீதே எமது அரசியல் சித்தாந்தம் வேரூன்றி நிற்கின்றது. இந்த நோக்கம் நாடளாவிய ரீதியில் செயற்படுவதற்கென நாம் கடந்த 2015 ஜனவரி 8 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது மாபெரும் பங்களிப்பை வழங்கியிருந்தோம். ஆகவே, எமது அரசியலானது அனைத்து மக்களதும் தேவைகள் மற்றும் அரசியலபிலாசைகளோடும் தமிழ் பேசும் மக்களது நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்துடனும் பின்னிப்பிணைந்துள்ளது.

இந்த பின்புலத்திலேயே நாம் எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்கின்றோம்.

2.1 அரசியல் தீர்வு தொடர்பான எமது நிலைப்பாடு

ஒரு ஜனநாயகத்தில் அரசாங்கம் என்பது “மக்களால் மக்களும் மக்களின் அரசாங்கமும் மக்களுக்கான அரசாங்கமும்” ஆகும். இந்த அடிப்படையில் மட்டுமே ஒரு பங்கேற்பு ஜனநாயகம் நிறுவப்பட்டு நிலைத்திருக்க முடியும். எனினும், தமிழ் பேசும் மக்கள் சிங்களவருடன் இணைத்து தமது இறையாண்மையை அனுபவிக்க அரசியலமைப்பு வழிவகைகளை வழங்கவில்லை. இந்த குறைபாட்டின் காரணமாக அவர்கள் அரசியல் அடிபணிதல், பொருளாதார மந்தநிலை மற்றும் கலாச்சார ஓரங்கட்டலுக்கு ஆளாகியுள்ளனர். நாம் இப் பாதகமான நிலைமையை ஒரு கூட்டு முயற்சியின் மூலம் மாற்றியமமைத்து, அரச முகவர்களின் சுரண்டல் மற்றும் அடக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு முனைவோம்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் சம~;டிக் கொள்கைகளை உள்ளடக்கிய அரசியலமைப்பு ஏற்பாட்டின் மூலம் மட்டுமே இலங்கைத் தமிழர்கள் மற்றும் தீவின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் வசிக்கும் ஏனைய தமிழ் பேசும் மக்களின் நியாயமான அபிலாசைகளை பூர்த்தி செய்ய முடியும். உண்மையில் அத்தகைய ஏற்பாடு அம்மக்களை நிலைநிறுத்துவதற்கு இன்றியமையாததாகிவிட்டது. கடந்த முப்பது ஆண்டுகளில் வரையப்பட்ட பாராளுமன்றத் தேர்வுக் குழுக்களின் பரிந்துரைகள் மற்றும் அவற்றை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு முன்மொழிவுகளை நோக்கும் போது, அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் ஓர் சம~;டி கட்டமைப்பை நோக்கி நகர்ந்துள்ளமை தென்படுகின்றது. இத்தகைய முன்மொழிவுகளின் அடிப்படையிலேயே அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன, மேலும் எதிர்காலத்தில் வரவிருக்கும் எவ்வித சவால்களையும் பொருட்படுத்தாது நாங்கள் இம் முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுப்போம். தேசிய நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்கு நேர்மையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போதெல்லாம், அதற்கீடாக பரஸ்பரமாக செயற்பட நாம் கடமைப்பட்டுள்ளோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வுகாண அத்தியாவசியமெனக் கருதும் கோட்பாடுகளும், பிரத்தியேக அரசியலமைப்பு ஏற்பாடுகளும் பிரதானமாக இத்தீவில் வாழும் பல்வேறு மக்களிடையே ஆட்சி அதிகாரங்களைப் பங்கிடுவதனூடாகப் பகிர்ந்த இறையான்மையினை உறுதிப்படுத்தலைக் குறித்தது. உண்மையான நல்லிணக்கத்தையும், நீடித்து நிலைக்கும் சமாதானத்தையும், இலங்கை மக்கள் அனைவருக்கும் பொதுவான அபிவிருத்தியையும் எய்துவதற்குப் பின்வரும் அதிகாரப் பங்கீட்டு அடிப்படைகள் முக்கியம் பெறுகின்றன.

 தமிழர்கள் தமக்கேயுரிய நாகரிகம், மொழி, கலாசாரம், மற்றும் பாரம்பரியத்தைக் கொண்ட தனித்துவமிக்க தேசிய இனமாவர். அத்துடன் நினைவுக்கெட்டாத காலம் முதல் தொன்று தொட்டே வாழ்ந்த தமிழ் மக்கள் சிங்கள மக்களுடனும் ஏனைய மக்களுடனும் இந்தத் தீவில் வாழ்ந்து வருகின்றனர்.

 புவியியல் ரீதியாகப் பிணைக்கப்பட்டுள்ளதும், தமிழ் பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதுமான வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களதும், தமிழ் பேசும் மக்களதும் பூர்வீக வாழ்விடங்களாகும்.

 இலங்கை நாடு ஏற்றுக்கொண்டு, கைச்சாத்திட்டுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் குடியியலுரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சாசனத்திலும், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் தொடர்பான சாசனத்திலும் அடங்கியிருக்கும் விதிகளின் பிரகாரம் தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான மக்கள் என்ற அடிப்படையில் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்களாவர்.

 முன்னர் இருந்தவாறு ஒன்றுபட்ட வடக்கு-கிழக்கு அலகைக்கொண்ட சம~;டிக் கட்டமைப்பிற்குள்ளே அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இது வடக்கு-கிழக்கில் வாழும் எந்த ஒரு மக்கள் மீதும் எவ்வித முரண்பட்ட தாக்கத்தையும் ஏற்படுத்தா வண்ணம் இருத்தல் அவசியம்.

 பகிரப்பட்ட இறையாண்மையின்; அடிப்படையில் உருவாக்கப்படும் அதிகாரப்பகிர்வு ஏற்பாடானது நிலத்தின் மீதும், தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்;, சட்டம்-ஒழுங்கு, சட்ட அமுலாக்கம் என்பவற்றின் மீதும், சமூக பொருளாதார அபிவிருத்தியின்; அங்கங்களான சுகாதாரம், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் பயிற்சி, விவசாயம், மீன்பிடி, கைத்தொழில், கால்நடை அபிவிருத்தி, பண்பாட்டுத்துறை, உள்நாட்டிலும், வெளிநாட்டிலுமிருந்து வளங்களை திரட்டிக்கொள்ளல் மற்றும் நிதி அதிகாரம் என்பவற்றின் மீதானதாகவும் இருக்;க வேண்டும்.

மேற்குறித்த யாவும் ஒன்றுபட்டதும் பிளவுறாததுமான இலங்கைக்குள் வன்முறையற்ற சமாதான வழிமுறைகளில் அமைந்த பேச்சுவார்த்தையூடாக நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

வடக்கு கிழக்கின் வரலாற்றுக் குடிகளான தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் மேற்கொள்ளப்படும் அனைத்து அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகளினதும் நன்மைகளைப் பெற உரித்துடையவர்கள்.

  1. வடக்கு கிழக்கு இராணுவமயமாக்கப்படல்

2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஆரம்பமான வடக்குக் கிழக்கின் இராணுவமயமாக்கல், மக்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளில் முறைசாராத, சட்ட முறைக்கப்பாற்பட்ட மற்றும் தன்னிச்சையான இராணுவ அடக்குமுறைகளை கொண்டுவந்ததன் மூலம் தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதிகளில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடு ஜனநாயக நிறுவனங்களை படிப்படியாக அழித்ததுடன், அரசு நிதியுதவியுடன் நடைபெற்ற பொருளாதார நடவடிக்கைகளில் காணப்பட்ட இராணுவ தலையீடு, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளையும், வடக்கு மற்றும் கிழக்கில் விவசாயத் துறையையும் மோசமாக பாதித்தது. மேலும், சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் வேறுபட்ட கருத்துடையவர் எனக்கருதப்படும் நபர்கள் ஆகியோர் மீதான கண்காணிப்பு, அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல் ஆகியன, அச்சம் மற்றும் சந்தேகம் மிகுந்த சூழலை உருவாக்கியதுடன், ஏற்கனவே மன அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்த மக்களை மேலும் அதிர்ச்சி மற்றும் மன அழுத்தத்திற்கு உட்படுத்தி, அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவிடாது செய்தது.

ஜனநாயகத்தில் இராணுவத்தின் பங்கு தெளிவாக வரையறுக்கப்பட்ட ஒன்று என்றும் அது பொதுமக்களின் அதிகாரம் மற்றும் மேற்பார்வைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக நம்புகிறது. சிவில் நிர்வாகம், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சட்ட அமுலாக்கல் செயற்பாடுகளில் இராணுவம் ஈடுபடுவதையோ அல்லது குடியுரிமைகளைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவம் சட்டமுறைக்கப்பாற்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதையோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் செய்கிறது. இந்த பின்னணியில், பல்வேறு நோக்கங்களுக்கான பணிக்குழுக்களை நியமிப்பதில் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை ஈடுபடுத்துதல் போன்ற அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் தொடர்பில் நாம் அதிக அக்கறை கொள்கிறோம்.

ஜனநாயக வெளி மற்றும் நிறுவனங்களை துரிதமாக மீள் – இராணுவமயமாக்கலுக்கெதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் சவால் விடுக்கும். மேலும் பாராளுமன்ற செயல்முறைகள், சர்வதேச மட்டத்தில் பரிந்துபேசுதல், இராணுவமயமாக்கல் காரணமாக குடிமை உரிமைகள் தடைசெய்யப்பட்ட அல்லது மீறப்படுவோர்க்கு ஆதரவளித்தல் உள்ளிட்ட பல வழி முறைகளை பயன்படுத்துவதன் மூலம் இராணுவமயமாக்கலை நீக்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுக்கும்.

  1. கடந்த காலத்தை கையாளுதல்

19 மே 2009 அன்று, முப்பது ஆண்டுகால யுத்தம் முடிவடைந்தபோது, பேரழிவிற்குள்ளான வடகிழக்கில் அளவிட முடியாத இழப்பு மற்றும் அதிர்ச்சியை அனுபவித்த மக்களே எஞ்சியிருந்தனர். நாட்டிற்குள்ஐம்பது இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் இடம்பெயர்ந்ததுடன் யுத்த காலத்தில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இறுதி கட்ட யுத்த கால இராணுவத் தாக்குதலின் போது எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக நம்பத்தகுந்த மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் பலர் கடுமையாக காயமடைந்ததோடு, அங்கவீனப்பட்டுள்ளனர். அத்தோடு பலர் காணாமல் போயுள்ளனர். போரினால் வடக்கு மற்றும் கிழக்கில் ஏற்பட்ட சமூக-பொருளாதார மாற்றமானது இப்பிரதேசங்களில் உள்ள மக்கள் இன்றும் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் மற்றும் வாழ்க்கையை மீளகட்டியெழுப்புதலிலும், தாக்கத்தை செலுத்துகிறது.

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் இன்னும் தீர்க்கப்படவில்லை. காணாமல்போனவர்களின் அலுவலகம் மற்றும் இழப்பீடு வழங்கும் அலுவலகம் ஆகியவை சட்டப்படி உருவாக்கப்பட்டிருந்தாலும், காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. இராணுவத்தில் சரணடைந்தும் காணாமல் போன பலருக்கு என்ன நடைபெற்றது என்ற கேள்வி இன்னமும் உள்ளது. இவ்விடையங்களில் உண்மை கண்டறியப்பட வேண்டும், நீதி வழங்கப்பட வேண்டும் மற்றும் இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

யுத்தம் இடப்பெற்ற காலம் முழுவதும், தமிழர்கள் தமது அடையாளத்தின் காரணமாக மட்டுமே இலக்கு வைத்து நடாத்தப்பட்ட வன்முறை, துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தலுக்கு ஆளானார்கள். இந்த அடிப்படைக் காரணி அடங்கலாக தமிழ் சமூகம் அனுபவித்த பாகுபாடு மற்றும் வன்முறை ஆகியன எந்தவொரு நிலைமாறுகால நீதி செயல்முறையிலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். எந்தவொரு இடைக்கால நீதி செயல்முறையும் பக்கச்சார்பற்ற, அனைத்தையும் உள்ளடக்கிய, வெளிப்படையான மற்றும் பாதிக்கப்பட்டவர் தொடர்பில் கரிசனை உள்ளதாக இருக்க வேண்டும்.

4.1. நீதி மற்றும் பொறுப்புக்கூறல்

இனக்கலவரத்தின் வரலாறு முழுவதும் தமிழ் மக்கள் அனுபவித்த மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்களுக்கான நீதி என்பது, விட்டுக்கொடுப்பற்றதாகவும்; அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் இன்றியமையாத ஒரு அங்கமாக அமைகிறது.

இலங்கைக்குள் நீதியை நிலைநாட்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கையுடன் செயல்பட்ட போதிலும், அதன் முயற்சிகள் வெற்றிகரமாக அமையவில்லை. இப்பின்னணியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு சுயாதீனமான சர்வதேச பொறிமுறையை தொடர்ந்து ஆதரிப்பதுடன், இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் ஆட்கொணர்;வுமனு வழக்குகள் போன்றவற்றில் செயற்படுவது போலவே, நீதி வழங்கப்படாத சந்தர்ப்பங்களில், இலங்கை தன் ஆணையை சரிவர நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

தற்போதுள்ள இயங்கிவரும் நிறுவனங்கள் மற்றும் பொறிமுறைகளின் பொறுப்புக்கூறலை பேணுவதன் ஒரு பகுதியாக, மிருசுவில் கொலைவழக்கில் தண்டனை பெற்ற சுனில் ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதியின் பொது மன்னிப்பை சவாலுக்குட்படுத்தி அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்தது போல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, அவர்களின் புறநிலைத் தன்மை மற்றும் பக்கச்சார்பற்ற தன்மையை சோதிப்பதற்கு இப்பொறிமுறைகளை பயன்படுத்த வைப்பதற்கான எல்லா சந்தர்ப்பங்களையும் உபயோகிக்கும்.

4.2. உண்மை

மனித உரிமை மீறல்களுக்குள்ளானவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது, அதாவது காணாமல் போனவர்களின் குடும்பங்கள் உண்மையை அறிந்து கொள்ளுதல் என்பது, எந்தவொரு நீதி பொறிமுறையின் வெற்றியோடு ஒன்றிணைந்ததாகவும், அதற்கு இன்றியமையாததாகவும் உள்ளது. இந்த கோரிக்கைகளை பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

உண்மையை கண்டறியும் பொறிமுறையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து ஆதரிக்கும். நாட்டில் ஒரு உண்மையை கண்டறியும் பொறிமுறையானது திறம்பட செயல்பட வேண்டுமென்றால், பயமோ, அச்சுறுத்தலோ, சிறுபான்மையினர், சிவில் சமூகம் மற்றும் மாற்றுக்கருத்துடையோர்க்கு எதிரான வன்முறையோ துன்புறுத்தலோ இல்லாத ஒரு சூழலொன்று காணப்பட வேண்டும் எனும் புரிதலின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு செயற்படும்.

4.3. இழப்பீடுகள்

வரலாற்று இழப்புகளையும், பெண்கள், போரினால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்கள் போன்ற மோசமாக பாதிக்கப்பட்டுள்ள குழுக்களின் தேவைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் ஒரு விரிவான, முழுமையான இழப்பீட்டுத் திட்டமொன்று வகுக்கப்பட வேண்டும். திட்டத்தை உருவாக்கும் செயல்முறை பரந்த உள்ளடக்கமுடையதொன்றாக இருப்பதுடன் அது பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் சிவில் சமூகத்துடனான பரந்த ஆலோசனையுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

4.4. நினைவுகூரல்

போரில் குடும்ப உறுப்பினர்களையும் அன்புக்குரியவர்களையும் இழந்த அனைவருக்கும் அவர்களை நினைவுகூர உரிமை உண்டு. யுத்தம் முடிவடைந்ததிலிருந்து, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்கள் நினைவேந்தல் நடவடிக்கைகளில் சுதந்திரமாக ஈடுபடுவதை அரசு தடுத்துள்ளது, இதன் மூலம் அவர்கள் பல ஆண்டுகளாக அனுபவித்து வரும் வேதனை உணர்வும் அதிர்ச்சியும் அதிகரித்துள்ளது.

தமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமை மதிக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் யுத்தம் முடிவடைந்ததிலிருந்து நடைபெற்று வருவதைப் போலவே அவர்கள் நினைவுகூரலில் ஈடுபடும்போது மிரட்டல், துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகக்கூடாது. மேலும் நினைவுக் கிரியைகளில் ஈடுபடுவதைத் தடுக்கக்கூடாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருகிறது.

  1. கருத்துச் சுதந்திரமும் குழுமச் சுதந்திரமும்

இப்பிரதேசங்களில் உள்ள சிவில் சமூக அமைப்புகள், செயலார்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் கண்காணிப்பு, துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதையும், சிவில் சுதந்திரம் முடக்கப்படுவதற்கான முயற்சிகள் இடப்பெறுவதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவனத்தில் கொள்கிறது. பாராளுமன்ற செயல்முறைகள், சட்ட ரீதியான தலையீடுகள் மற்றும் சர்வதேச மட்டத்தில் பரிந்துபேசுதல் ஆகியவற்றின் மூலம் இந்த அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிராக இருக்கும்;.

  1. பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அரசியல் கைதிகள்

யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாகியும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (Pவுயு) கீழ் கிட்டத்தட்ட தொண்ணூறு பேர் சிறைகளில் உள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்களை விடுதலை செய்வதற்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதற்கும் அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த நோக்கத்தை கடுமையாக தொடர்ந்து முன்னனெடுக்கும்.

  1. சமூக-பொருளாதாரப் பாதுகாப்பு

வடக்குகிழக்கு மக்கள் தங்கள் வாழ்வாதாரங்கள் மற்றும் பொருளாதார பாதுகாப்பைப் பொறுத்தவரையில் பாரிய சேதத்தை விளைவித்த இழப்பொன்றை சந்தித்துள்ளனர். பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், காணாமல் போனவர்களின் குடும்பங்கள், முதியவர்கள், அனாதைக் குழந்தைகள் மற்றும் முன்னாள் போராளிகள் ஆகியோர் சொல்லொண்ணா துயர்களை அனுபவிப்பதுடன் மென்மேலும் வறுமைக்குள் தள்ளப்படுகிறார்கள். இவற்றின் விளைவால் அவர்கள் சுரண்டலுக்குள்ளாகக் கூடிய நிலைமையில் காணப்படுகிறார்கள். சிறுவர்களை எடுத்துக்கொண்டால், இது அவர்களின் வாழ்க்கை வாய்ப்புகளை அழித்து, அவர்கள் சமூகத்தில் மேல்நோக்கி நடைபோட முடியாமல் தடுக்கிறது. வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இன்றியமையாத பின்வரும் அம்சங்களை நோக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயல்படும்.

●வடக்குகிழக்கில் ஒரு மாற்று பொருளாதார முறைமை உருவாக்கப்படும். இது பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரிக்கும்.

●பல தசாப்தங்களுக்கு முன்னர் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் கூட்டுறவு இயக்கமானது மிகவும் வெற்றிகரமாக இருந்தது. கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு கிராமிய வங்கிகளைப்; பலப்படுத்துவதன் மூலம் பிராந்திய மற்றும் கிராமப்புற பொருளாதாரங்கள் புத்துயிர் பெறுவதை நாங்கள் தீவிரமாக ஊக்குவிப்போம்.

●வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்களின் பொருளாதாரத் தேவைகளை அரசாங்கம் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கின் பொருளாதார வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் மற்றும் சர்வதேச சமூகத்தினரின் முதலீட்டை அதிகரிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயல்படும். வடக்கு மற்றும் கிழக்கின் வளர்ச்சிக்கான விரிவான திட்டத்தின் ஒரு அம்சமாக, குறிப்பாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதை கருத்திற் கொண்டு, வடகிழக்கில் வெளிநாட்டு முதலீடுகள் நேரடியாக இடம்பெறுவதை ஊக்கப்படுத்த வேண்டும்.

●பொருளாதார,கலாச்சார மற்றும் இலக்கிய நடவடிக்கைகளுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும்; நோக்கோடு, பலாலி சர்வதேச விமான நிலையம் வழியாகவும், காங்கேசன்துறை துறைமுகத்தினூடான பயணிகள் சேவை மற்றும் பண்டமாற்று சேவை கடல் மார்க்கமாகவும் இந்தியாவுக்கான போக்குவரத்து வசதிகள் செய்யப்படுதல் வேண்டும்.

●சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு சாதகமான வட்டி வீதத்துடன் கடன் வழங்குதல் மற்றும் உதவித்தொகை வழங்குதல் போன்றன முலம் ஆதரவு வழங்கப்பட வேண்டும்.

●வட கிழக்கிலுள்ள விவசாயம் மற்றும் மீன்வளத் துறைகளுக்கான ஆதரவு வழங்கப்பட வேண்டும், இதில் துறைமுகங்களை மீளக் கட்டியெழுப்புதல் மற்றும் இலங்கையின் கடல் எல்லைகளை மீறுபவர்களால் கடல் வாழ்க்கை மற்றும் வளங்களுக்கு பாதிப்பு ஏற்படாமையை உறுதிப்படுத்தல் என்பன அடங்கும். மேலும், விவசாயம் மற்றும் மீன்வளத் துறைகளுக்கான விநியோகம், சந்தைப்படுத்தல் மற்றும் போக்குவரத்துக்கான வசதிகள் நிறுவப்பட்டு, தற்போதுள்ள நடைமுறையிலுள்ள பொறிமுறைகளும் மற்றும் செயல்முறைகளும் பலப்படுத்தப்பட வேண்டும்.

●ஏற்றுமதிச் சாத்தியமுள்ள விவசாயம் சார்ந்த தொழில்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படும். நாட்டில் பரந்த சந்தையைக் கொண்ட பொருட்களின் பயிர்ச்செய்கை ஊக்குவிக்கப்படும். திராட்சைப் பழங்களின் உற்பத்தியும் ஏனைய பழங்களின் பதப்படுத்தல் மற்றும் தகரத்தில் அடைத்தல் ஆகியவற்றுக்கான ஆலைகள் நிறுவப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

●சேதன வேளாண்மை பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை ஊக்குவிப்பதற்கான ஒவ்வொரு முயற்சியையும் செய்வோம்.

●பனைவள உற்பத்திகளை நவீனமயப்படுத்துதலும் அதற்கான நவீன பொறிமுறைகளை கையாண்டும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதலும் வேண்டும்.

 யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு, அம்பாறைப் பகுதிகளில் மீன்களைப் பதனிடுவதற்கும் தகரத்திலடைப்பதற்குமான ஆலைகளை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

●கால்நடை மற்றும் பாற்பொருட்களின் உற்பத்தி ஊக்குவிக்கப்படும்.

●பல்வேறு திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் நீர் பற்றாக்குறை பிரச்சினைகள் குறைக்கப்படும். நமது விவசாயத் தேவைகளுக்கான நீர்வளத்தை அதிகரிக்கும் வகையில் வடக்குக்கிழக்கில் உள்ள அனைத்து சிறு குளங்களையும் புனரமைக்கும் திட்டமும், வடக்கில் உள்ள குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

●பல்கலைக்கழகங்களுக்குள் நுழைய முடியாதவர்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் உயர் கல்வியைத் தொடர புதிய நிறுவனங்களை நிறுவுவதன் மூலம் மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழில்நுட்ப, தொழில் பயிற்சி ஆகியவற்றிற்கு அதிகரித்த வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

●அனைத்து முன்னெடுப்புக்களிலும் எப்போதும் பாலின சமத்துவமின்மை மற்றும் பொருளாதாரத் துறையில் சமத்துவமின்மை காணப்படுவதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் பெண்களின் தனித்துவமான தேவைகள் மற்றும் பிரச்சனைகள் கவனிக்கப்படுவதும் உறுதி செய்யப்பட வேண்டும்.

●அரசு வேலைவாய்ப்பின் மூலம் கிடைக்கும் பிரதான வருமானம். பாடசாலைகள் மற்றும் அரச நிர்வாகத்தில் உள்ள அனைத்து வெற்றிடங்களும் தகுதியான நபர்களால் நிரப்பப்பட வேண்டும். அவர்களின் தகுதிப்படி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகளுக்கெதிராக எழக்கூடிய தடைகளை நீக்க முயற்சிப்போம்.

●யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வெளியே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களிலும் கலாச்சார நடவடிக்கைகளை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

●மது மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாதல் வலுவாகவும் திறமையாகவும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்.

●எல்லா வகையான வன்முறைகளும் முடிவுக்கு கொண்டுவரப்படும், குறிப்பாக, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கெதிரான துஸ்பிரயோகங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

●வடக்கு மாகாணத்தில் உள்ள முன்பள்ளி மற்றும் ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களை பாதிக்கும் அனைத்து சிக்கல்களும் உடனடியாக கவனத்திலெடுக்கப்பட்டு, அவர்களுக்கு திருப்திகரமான முறையில் அப்பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

●வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து தொல்பொருள் தளங்களும் அந்தந்த மாகாண சபைகளின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் கொண்டுவரப்படும்.

  1. இடம்பெயர்ந்த மற்றும் நில உரிமைகளின் உரிமைகள்

8.1. இடம்பெயர்ந்தோரின் உரிமைகள் மற்றும் காணி உரிமை

ஆயுத போராட்டத்தினால், 500,000திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வீடற்றவராகி நிர்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டனர். கடந்த பல ஆண்டுகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அயராத முயற்சிகளின் காரணமாக, 2015 ஜனவரியில் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர், நிலங்களை திருப்பித் தருவதற்கும், வடக்கில் வலிகாமதிலிருந்தும் கிழக்கில் சம்பூரிலிருந்தும் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கும் முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும்,கேப்பாபுலவில் 1,000 ஏக்கர் விவசாய நிலங்களும் விடுவிக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும்,இலங்கை அரசு,சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியிற்கு மாறாக, பலர் இன்னமும் தங்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவில்லை. இடம்பெயர்ந்தவர்களுக்கு இன்னும் நிரந்திர தீர்வு எட்டப்படவில்லை.

யுத்தத்தின் போது வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தாமதமின்றி தங்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும். மேலும் இவர்களுக்கு வீட்டு மற்றும் வாழ்வாதார வசதிகள் அவர்களுடைய சுயமரியாதையை மதிக்கும் வகையில் வழங்கப்பட வேண்டும். இராணுவக்கட்டுப்பாட்டின் கீழுள்ள தனியார் நிலம் விடுவிக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு காலத்திற்குரிய இழப்பீடு உரிமையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மிரட்டி அல்லது நிர்பந்தித்து கையகப்படுத்தப்பட்ட நிலம் அதன் உரிமையாளர்களுக்கு திருப்பி வழங்கப்பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புநிலங்களை விடுவிப்பதற்கு கேப்பாபிலவு; மக்களை போல் அயராத பிரச்சார முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் அனைத்து மக்களுக்கும் அதன் முழு ஆதரவை வழங்கும்;.

மீள்குடியேற்ற திட்டங்கள் சமத்துவமான முறையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.குறிப்பாக பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் மற்றும் முதியவர்கள் போன்ற ஒடுக்கப்பட்ட மற்றும் அதிகம் பாதிக்கப்பட்ட குழுக்கள், அவயங்கள் இழந்தவர்கள் தொடர்பில் மேலதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். மிக முக்கியமாக, இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படும் போது வெளிப்படைத்தன்மை அவசியம்.

நாட்டை விட்டு வெளியேறிய நபர்கள் நாட்டிற்கும் தங்கள் வீடுகளுக்கும் திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும். மேலும் அவர்கள் திரும்பி வருவதற்கு ஏதுவான சூழ்நிலையும் உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாக, தென்னிந்தியாவில் சுமார் 100,000 அகதிகளின் மீள்வருகை துரிதப்படுத்தப்பட்டு இவர்களின் மீள்குடியேற்றம் மற்றும் மறு-ஒருங்கிணைப்பிற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

8.2 காணி

காலங்காலமாக நடைபெற்று வரும் அரசின் காலனித்துவப்படுத்துதல் மற்றும் சிங்களமயமாக்குதல் முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதனால் வடக்கு கிழக்கு மக்களின் நில உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுவாக நம்புகிறது. மகாவலி, காடுகள்,வனவிலங்கு மற்றும் தொல்பொருள் தொடர்பான சட்டங்கள்; தமிழ் மக்கள் நில உரித்துக்கள் பாதிப்படையும் வகையில் மறைமுகமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்திற்கான தொல்பொருள் தளங்களுக்கான ஜனாதிபதிச் செயலணி நியமிக்கிப்பட்டதும் இத் திசையில் பயணிக்க அரசு எடுத்த அப்பட்டமான பாரபட்ச முயற்சி ஆகும்.

ஆகையால், நில ஆவணங்கள் இழந்தவர்கள் அல்லது ஆவணங்கள் பதிவு செய்யப்படாத நபர்கள், மற்றும் பதிவு மறுக்கப்பட்டதால் அல்லது ஆவணப்படுத்தல் செயல்முறைகளை அணுக முடியாமல் போனவர்கள் ஆகிய அனைவருக்கும் நில உரிமை மறுக்கப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கீகரிக்கிறது.

தொல்பொருள் இடங்களை பாதுகாத்தல் என்ற போர்வையில் பிராந்தியத்தை சிங்களமயமாக்கும் முயற்சிகளையும், பிராந்தியத்தின் சமூகங்களின் மத வழிபாட்டுத் தலங்களை அழிப்பதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து நிற்கின்றது. அரச மற்றும் குறிப்பாக தனியார் நிலங்களை அபிவிருத்தி என்ற பெயரில் பெரும்பான்மை கொள்கைகளை முன்னெடுத்தலை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கையாய் இருக்கும். அத்துடன் இதுபோன்ற முயற்சிகளின் பாதகமான சுற்றுச்சூழல் தாக்கத்தை குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து நிற்கும்.

ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட முடிவான கல்முனைக்கென்றொரு தனித்த தமிழ் பிரதேச செயலகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தி முன்வைக்கின்றது.

  1. முன்னாள் போராளிகளின் வாழ்க்கையை மீள்கட்டியெழுப்புதல்

தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர்களாக அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட நபர்கள் தடுத்துவைக்கப்பட்டு இதன்போது பல உரிமை மீறல்களுக்கு உள்ளாகினர். அவர்கள் விடுவிக்கப்பட்டதன் பின்பு அவர்களின் வாழ்க்கையை மீள்கட்டியெழுப்ப தேவையான ஆதரவு அவர்களுக்கு வழங்கப்படவில்லை. எதிர்மாறாக, அவர்கள் பாதுகாப்புப் படைகள் மற்றும் உளவுத்துறையினரால் கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதோடு சமூகத்தினாலும் ஓரங்கட்டப்படுகின்றனர். இது அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை அணுகுவதற்கும் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் பெரும் சவாலாக அமைந்தது. மேலும், பலர் தொடர்ந்தும் பயங்கரவாத புலனாய்வுத் துறையால் (வுஐனு) விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர். இவ் விசாரணையானது தற்காலத்தில் நடந்த ஒரு குற்றத்திற்கான விசாரணையாக அல்லாது, 2009ற்கு முன் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தில் அவர்களின் நிலைப்பாடு மற்றும் பங்கு ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தியதாகத்தென்பட்டது.

யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, அரச புனர்வாழ்வு திட்டங்களுக்கு அனுப்பப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் பல தடைகளை எதிர்கொள்கின்றனர். எனவே அவர்களின் தேவைகள் கண்டறியப்பட்டு பிரச்சினைகள் நிவர்த்தி செய்யபட வேண்டும். அவர்களுக்கு பொருத்தமான வாழ்வாதாரத்தை பெற்றுக்கொள்ள திட்டங்கள் தீட்டப்படும் அதே வேளை, அவர்கள் அரசால் துன்புறுத்தல் அல்லது அச்சுறுத்தல்களுக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்யப்பட வேண்டும். அத்தோடு அவர்கள் முற்றுமுழுதாக சமூகத்துள் உள்வாங்கப்படுதலும் வேண்டும்.

பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் பல காரணிகளால் மாறுபட்ட பிரச்சினைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இவ் வர்க்கத்தினருக்கு சிறப்பு உதவி நடவடிக்கைகள் கிடைக்கபெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

  1. பாலின சமத்துவம்

வடக்கு-கிழக்கு மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் போதும், ​​அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உழைக்கும்போது, ​​பாலின சமத்துவமின்மை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்துகொண்டுள்ளது. யுத்தமானது ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களை பல்வேறு வித்தியாசமான முறைகளில் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பெண்கள் வரலாற்று, அமைப்புசார் மற்றும் கட்டமைப்புசார் பாகுபாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையால், அரசியல் தீர்வு முதல் வடக்குக்கிழக்கை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் வரை ஒவ்வொரு முயற்சியும், இது பெண்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை கருத்திற் கொண்டு பெண்களின் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் இன்னல்கள் தீர்க்கப்பட வேண்டும்.

  1. சர்வதேச சமூகத்தின் வகிபாகம்

தமிழ் மக்கள் உள்ளுர் பொறிமுறைகளினூடாகத் தமது தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயமானதும், ஏற்றுக்கொள்ளக் கூடியதுமானதொரு தீர்வினைப் பெற்றுக்கொள்ள அர்ப்பணிப்புடனே இருந்து வந்துள்ளனர். இலங்கை அரசே கிட்டிய சந்தர்ப்பங்களையெல்லாம் உதறித் தள்ளியது மட்டுமல்லாது தொடர்ச்சியாக இலங்கைத் தமிழர் மீது இனஅழிப்பைக் கட்டவிழ்ப்பதனூடாக அடக்கியாளவும் தலைப்பட்டது. இலங்கை அரசின் இந்த நிலைப்பாடே தேசியஇனப்பிரசச்pனையைசர்வதேசமயமாக்கியதோடுசர்வதேசவகிபாகத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தையும் இலங்கை அரசிற்கு ஏற்படுத்தியது. இலங்கை அரசின் இந்த நிலைப்பாட்டின் தவிர்க்க முடியா விளைவான ஆயுதப் போராட்டம் இன்று முடிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது சர்வதேச தலையீட்டின் மூலம் விளைந்த சிறிதளவான நன்மைகளையும் களைய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இலங்கையில் வாழும் பல்லின மக்களிடையே நிரந்தரமானதும், நிலையானதுமான நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அனைவரும் சமத்துவமுள்ள குடிமக்களாக வாழ வழிசெய்ய சர்வதேச வகிபாகம் தொடர்வது முன்னை விட தற்போது அத்தியாவசியமானது என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். இதன் அடிப்படையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பானது சர்வதேச சமூகத்தின் முயற்சிகளோடு தொடர்ந்தும் ஈடுபடுவதோடு தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஐ.நா. சிறப்பு நடைமுறைகள் போன்ற சர்வதேச வழிமுறைகளைப் பயன்படுத்துவதில் அதன் கவனத்தை செலுத்தும்.

அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறுவப்பட்ட ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுத் தீர்மானங்களான 30ஃ1இ 34ஃ1இ 40ஃ1 முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்

இலங்கை நாட்டில் ஒரு சர்வாதிகார ஆட்சி தோன்றுவதைத் தடுக்கவும், ஜனநாயக கொள்கைகளை பாதுகாத்து வளர்க்கவும் நாட்டில் முற்போக்கு சக்திகளுடன் நாங்கள் சேர்ந்து பயணிப்போம். 19ஆவது திருத்தத்தால் அமைக்கப்பட்ட சுயாதீன நிறுவனங்கள் பாதுகாக்கப்பட்டு மேலும் பலப்படுத்தப்பட வேண்டும். மேலும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை பலப்படுத்த இடமளிக்காது பாராளுமன்ற ஜனநாயக கட்டமைப்பை நிலைநிறுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

  1. எதிர்காலம்

யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை தேர்தல் மாவட்டங்களில் வாழும் வாக்காளர் யாவரும் ஒன்றுபட்டு, வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகள் மற்றும் அபிலாசைகளுக்காகத் தொடர்ந்து குரல் எழுப்ப, செயலாற்ற முழுமையாகத் தமது வாக்குகளை இலங்கைத் தமிழ்; அரசுக் கட்சி என்ற பெயரிலும், வீட்டுச் சின்னத்திலும் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து, தமிழ் மற்றும் தமிழ் பேசும் மக்களது அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இந்த தேர்தல் அறிக்கையில் முன்மொழியப்பட்டிருக்கும் செயற்றிட்டங்களுக்கு தங்கள் ஜனநாயக ஆணையினை பூரணமாக வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அன்புடன் வேண்டி நிற்கின்றது.

இத் தேர்தல் அறிக்கையானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலைக் இயக்கம்;,தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகியவற்றால் இணைந்து வெளியிடப்படுகின்றது.