பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அஜித் ரோஹன மேலும் கூறியுள்ளதாவது, ”கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சிறிலங்காவில் அதிகரித்துள்ளதன் காரணமாக பேருந்து உரிமையாளர்களுக்கும், நடத்துனர்களுக்கும் சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதில் மிகவும் முக்கியமானதாக, ஆசனங்களின் எண்ணிக்கையை விட அதிகளவிலான பயணிகளை ஏற்றிச் செல்வதை தவிர்க்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்.
எனினும் இவற்றை கருத்திற் கொள்ளாமல் சில தனியார் பேருந்துகள் தொடர்ந்தும் அதிகளவிலான பயணிகளை ஏற்றிச் செல்வதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
ஆகவே இவ்வாறு செயற்படும் பேருந்து உரிமையாளர், சாரதி மற்றும் நடத்துனர் உள்ளிட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.