மேற்கு வங்காள மாநிலம் போல்பூரை சேர்ந்த சுஷோவன் பானர்ஜி என்ற டாக்டர், கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.மேற்கு வங்காள மாநிலம் போல்பூரை சேர்ந்த சுஷோவன் பானர்ஜி என்ற டாக்டர், கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். தனது வாழ்நாளில் அதிகமான நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்ததற்காக அவருக்கு இந்த பெருமை கிடைத்துள்ளது. இந்த ஆண்டு அவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்து கவுரவித்தது.
சுஷோவன் பானர்ஜி, கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரியில் இளநிலை மருத்துவ பட்டமும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் தங்க பதக்கத்துடன் முதுநிலை மருத்துவ பட்டமும் பெற்றார். லண்டனில் படித்து மருத்துவ டிப்ளமோ பெற்றார்.
பின்னர், மூத்த பதிவாளராக 4 ஆண்டுகள் பணியாற்றினார். அதையடுத்து, போல்பூருக்கு திரும்பி மருத்துவராக பணியாற்ற தொடங்கினார். 57 ஆண்டுகள் மருத்துவ பணியில் 20 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு மருத்துவம் பார்த்துள்ளார். கடந்த 1984-ம் ஆண்டு, காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.
போல்பூர், அதை சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமின்றி, தொலைவில் உள்ள பிர்பும் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் அவரிடம் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல ஆண்டுகளாக அவர் 1 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்று வருகிறார். அதனால், ‘1 ரூபாய் டாக்டர்’ என்று பெயர் பெற்றுள்ளார். ஏழை நோயாளிகள், அவரை வாழும் கடவுளாக பார்த்து வருகின்றனர்.
கின்னஸ் சாதனை குறித்து டாக்டர் சுஷோவன் பானர்ஜி, ‘’இந்த கவுரவம், இன்னும் நிறைய நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்கும் உத்வேகத்தை அளிக்கிறது. முதுமை காரணமாக முன்புபோல் என்னால் நடமாட முடியவில்லை. ஏழை நோயாளிகளால்தான் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற முடிந்தது. அதனால் அவர்களுக்கே இந்த கவுரவத்தை அர்ப்பணிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.