மத்திய மாகாணத்தில் உற்பத்தியை நிறுத்தியுள்ள தேயிலை தொழிற்சாலைகள் தொடர்பில் உரிய சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து ஒரு வார காலத்திற்குள் அந்த தொழிற்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேயிலை சபைக்கு ஆலோசனை வழங்கினார்.
13 தேயிலை தொழிற்சாலைகளின் உற்பத்திகளை நிறுத்துவது குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் வழங்கப்படக்கூடிய தீர்வு தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு இன்று (17) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கினார்.
இதன்போது, மத்திய மாகாண தேயிலை தொழிலாளர்கள் கூறியதாவது, உரிய சோதனையின்றி மத்திய மாகாணத்தில் 13 தேயிலை தொழிற்சாலைகளின் உற்பத்தியை நிறுத்துவதற்கு தேயிலை சபை நடவடிக்கை எடுத்துள்ளமையினால் சுமார் ஒரு இலட்சம் பேர் வரையிலானோர் இதுவரையில் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இக்காரணத்தினால் உரிய சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து அந்த தொழிற்சாலைகளின் உற்பத்தியை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாகாண தேயிலை தொழிலாளர்கள் இதன்போது பிரதமரிடம் கோரிக்கை விடுத்தனர்.
குறித்த தேயிலை தொழிற்சாலைகள் தொடர்பில் தனித்தனியாக சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து கூடிய விரைவில் தொழிற்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரினால் தேயிலை சங்கத்தின் தலைவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
அதேபோன்று சட்டவிரோதமான முறையில் தேயிலை உற்பத்திகள் தொழிற்சாலைகளுக்குள் இடம்பெறுமாயின் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் இதன்போது மேலும் தெரிவித்தார்.