அமெரிக்கா, இலங்கைக்கு 1.92 பில்லியன் ரூபாய் நிதியுதவி

290 0

usaidஇலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயக நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனமான யுஎஸ்எய்ட் இன்று இலங்கை நாடாளுமன்றத்துடன் 1.92 பில்லியன் ரூபாய்க்கான பங்காளித்துவத்தை ஆரம்பித்தது.

இந்த பங்காளித்துவ நிதியின் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்கள், அமைச்சுக்கள் மற்றும் மாகாண, உள்ளுராட்சி நிர்வாகங்களுக்கு உதவியளிக்கப்படவுள்ளதாக அங்குரார்பண நிகழ்வில் உரையாற்றிய யுஎஸ்எய்ட்டின் பணிப்பாளர் அன்றூவ் சிசன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தமது நிறுவனம் ஆண் பெண் சமவாய்ப்பு மற்றும் அரசியல் மற்றும் தலைமைத்துவம் போன்றவற்றுக்கு உதவியளித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் மூன்று வருட அடிப்படையில் நல்லாட்சி அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயகத்துக்காக தமது நிறுவனம் பணியாற்றவுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

நிகழ்வில் சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்

இதேவேளை 1956ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அரசாங்கம், இலங்கையில் பொதுமக்கள் நலன்கருதி விவசாய அபிவிருத்தி, சுற்றாடல் நலன், கல்வி, சுகாதாரம், நல்லாட்சி, மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக 2 பில்லியன் டொலர்களை முதலிட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.