அமெரிக்க இராணுவத்தின் கண்ணிவெடி எதிர்ப்புப் பயிற்சி அணியினர் சிறீலங்கா இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவினருக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளனர்.
பூ ஓயாவில் உள்ள இராணுவத் தளத்தில் குறித்த பயிற்சிகள் ஒரு வாரத்தை விடவும் அதிகமான நாட்கள் நடைபெற்றது. இதில், சிறீலங்காப் படையினருக்கு முன்னாயத்தமற்ற வெடிபொருட்களைக் எவ்வாறு தேடிக் கண்டுபிடித்து அழிப்பது என்பது தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டன.
முன்னாயத்தமற்ற வெடிபொருட்கள் தொடர்பான சான்றிதழ் பயிற்சிநெறியாக இந்தப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி நெறியில் சிறீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 4 அதிகாரிகளும் 65 இராணுவத்தினரும் கலந்துகொண்டனர்.
இவர்களுக்கு அமெரிக்காவின் ஆசிய பசுபிக் முன்னாயத்தமற்ற வெடிபொருள் முறியடிப்புக்கான புல்டன் நிலையத்தைச் சேர்ந்த 4 வெடிபொருள் நிபுணர்களும், ஒரு இலத்திரனியல் முறியடிப்பு நிபுணரும் பயிற்சிகளை அளித்தனர்.
ஐஈடி எனப்படும் முன்னாயத்தமற்ற வெடிபொருள்கள், அவற்றின் அச்சுறுத்தல்கள், முன்னாயத்தமற்ற வெடிபொருட்கள் பொருத்தப்பட்டுள்ள பகுதிகளில் நடவடிக்கையில் ஈடுபடுதல், நடைமுறைப் பயிற்சிகள், இலத்திரனியல் போர் முறை, புதிய கருவிகள் அறிமுகம், வெடிபொருட்களை செயலிழக்கச் செய்தல், தடயவியல் சான்றுகள், வெடிப்புக்குப் பிந்திய ஆய்வு, சிறப்பு வெடிபொருட்கள் தொடர்பான பயிற்சி, வெடிபொருட்களை அகற்றுவதற்காக நுட்பங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.