இலங்கையில் மனித உரிமைகள் விடயத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது- பிரிட்டன்

286 0

இலங்கையில் மனித உரிமைகள் விடயத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ரப் கவலை வெளியிட்டுள்ளார்.

பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ரப், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம்  தொடர்பாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில், டொமினிக் ரப் மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது மிகவும் மந்தகதியிலேயே இடம்பெற்று வருகின்றது.

மேலும் முக்கிய பொறுப்புக்களுக்கு  சர்ச்சைக்குரிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமையானது, மனித உரிமைகள் மற்றும்  நல்லிணக்கம் குறித்த அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு தொடர்பாக  கேள்விகளை எழுப்பியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் இருந்து  சிவில் சமூகத்தினர் மற்றும்  மனித உரிமை பாதுகாவலர்கள் கண்காணிக்கப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை அரசமைப்பு சீர்திருத்தம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல்  உள்ளிட்ட முக்கிய விடயங்கள் பலவற்றில் முன்னேற்றம் அவசியம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.