மத்திய வங்கியின் ; பிணை முறிகள் மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் சி.ஐ.டி. விரிவாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
இது தொடர்பில் நேற்று சிரேஷ்ட அரச சட்டத்தரணி லக்மினி ஹ்ரியாகமவுடன் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜயசுந்தர கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு அறிவித்த நிலையில், விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்
நேற்றைய தினம் மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பிலான விவகாரத்தில் கறுப்புப் பண சுத்திகரிப்பு தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு அமைவான வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதன்போது சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பியசேன அம்பாவல உள்ளிட்ட குழுவினர், சிரேஷ்ட அரச சட்டத்தரணி லக்மினி ஹ்ரியாகம, பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தர்வுடன் மன்றில் ஆஜராகினர்.
இவ்வழக்கில் சந்தேக நபர்களான தற்போது பிணையில் உள்ள, பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன தலைவர் அர்ஜுன் ஜோசப் அலோசியஸ், அந் நிறுவனத்தின் பெயரளவிலான பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன, பணிப்பாளர்களான ஜெப்ரி ஜோசப் அலோசியஸ், புஷ்பமித்ர குனரத்ன, சித்த ரஞ்சன் ஹுலுகல்ல, முதுராஜா சுரேந்ரன், மற்றும் பீ.சமரசிங்க ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
எனினும் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேதிந்ரன், அஜான் புஞ்சிஹேவா ஆகியோர் மன்றில் ஆஜராகவில்லை. அவர்கள் வெளிநாட்டில் தலைமறைவகியுள்ளனர்.
இதன்போது இலங்கை மத்திய வங்கியின் முதல்நிலை வணிகராக செயற்பட்ட பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தினூடாக 2015 ஆம் ஆண்டில் மத்திய வங்கி முறிகளை கொள்வனவு செய்வதற்காக ஸ்டெல்லா அயிராங்கனி திசாநாயக்க மற்றும் சுனில் பிரேமரத்ன ஆகியோரினால் முதலீடு செய்யப்பட்ட நிதி முதிர்ச்சியடைந்திருந்தால் அதனை மீள செலுத்த உத்தரவிடுமாறு முதலீட்டாளர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி நலின் டி சில்வா மன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த நிதியை திருப்பிச் செலுத்துமாறு மத்திய வங்கி ஆளுநருக்கு உத்தரவிடுவது தொடர்பில் முறைப்பாட்டாளர் தரப்புக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜயசுந்தர மன்றுக்கு அறிவித்தார்.
இந் நிலையில் இது குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.