சிறிலங்காவில் அங்குலானை பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்தின் மீது மக்கள் மேற்கொண்ட தாக்குதலில் 8 பொலிஸார் காயமடைந்துள்ளனர்.
நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் 9 பெண்கள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 14 பேரையும் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டிலேயே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அண்மையில் அங்குலானை பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஒருவர் மரணமடைந்தார்.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸார் நீதிமன்றத்தில் முன்னிலையாகாதமையை தொடர்ந்தே இந்த வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் துப்பாக்கிச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் உறவினர்கள் உட்பட சுமார் 100 பேர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன் பொலிஸ் நிலையத்தின் மீது கல்வீச்சு தாக்குதலையும் மேற்கொண்டனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.