பிரான்ஸில் பல்வேறு பகுதிகளிலும் தீவிரமடையும் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை

323 0

பிரான்ஸின் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை சற்றுத் தீவிரமடைந்து வருகிறது. பாரிஸ் பிராந்திய மருத்துவமனைகளிலும் வைரஸ் தொற்றாளர்களின் வருகை லேசாக அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

கடந்த ஒருவார கால அவதானிப்புகளின் படி அம்புலன்ஸ் சேவைகளுக்கும்(Samu) அவசர மருத்துவர்களுக்கும்(SOS) உதவி கேட்டு வரும் அழைப்புகள் அதிகரித்துள்ளன.

பிரான்ஸ் இன்ரர்’ செய்தி ஏஜென்ஸிக்கு இன்று செவ்வி அளித்த சுகாதார அமைச்சர் ஒலிவர் வேரன்(Olivier Véran) இத்தகவல் களை உறுதிப்படுத்தி உள்ளார்.

நாட்டின் வடமேற்கே உள்ள மயேன்( Mayenne) என்னும் பகுதி மிக மோசமாக வைரஸ் பரவ லால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நிலைமை எச்சரிக்கை அளவை தாண்டியுள்ளது. மூடி முடக்கப்படவேண்டிய கட்டத்தை எட்டியுள்ள அந்தப் பகுதியில் வாழும் சுமார் ஒரு லட்சம் மக்களையும் வைரஸ் சோதனைக்கு உட்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.புதிதாக மேலும் வைரஸ் தொற்றுக்கள் கொத்தாக அங்கு அடையாளங் காணப்பட்டுள்ளன.

Nouvelle Aquitaine பிராந்தியத்தில் நகரங்கள், கிராமங்கள் எனப் பல இடங்களில் புதிய வைரஸ் தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுவருகின்றன.

பெருநிலப்பரப்புக்கு வெளியே பிரான்ஸின் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக உள்ள பிரெஞ்சு கயானா (Guyane), இந்து சமுத்திரத்தில் மடகஸ்கார் அருகே அமைந்துள்ள Mayotte தீவு ஆகிய இடங்களில் வைரஸ் தீவிரமாகப் பரவியுள்ளது. இவ்விரு பகுதிகளிலும் சுகாதார அவசரகால நிலைமை ஒக்ரோபர் மாதம் வரை நீடிக்கப்பட்டிருப்பது தெரிந்ததே.

உள்ளகப் பொது இடங்களில் ( lieu public clos)மாஸ்க் அணிவதைக் கட்டாயமாக்கும் விதிகள் அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வருகிறது என்று பிரதமர் Jean Castex இன்று அறிவித்தார்.

ஒகஸ்ட் முதலாம் திகதியில் இருந்தே இது நடைமுறைக்கு வருவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்து. அதிபர் மக்ரோன் தனது தொலைக்காட்சி நேர்காணலில் இதனை அறிவித்திருந்தார். ஆனால் அதுவரை காத்திருந்து காலம் கடத்தாமல் மாஸ்க் அணிவதை உடனடியாகக் கட்டாயமாக்குமாறு மருத்துவ நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கைகளை அடுத்து அரசு இதனை அடுத்தவாரம் தொடக்கம் அமுலுக்குக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளது.