வாசிம்தாஜூடீன் கொலை விவகாரம்- சந்தேகநபர் ஒருவர் உயிருடன் இல்லை மற்றவர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்- சட்டமா அதிபர் திணைக்களம்
இலங்கையின் பிரபல ரக்பி வீரர் வாசிம் தாஜூடீன் கொலை விவகாரத்தில் சந்தேக நபர் என கருதப்பட்ட முன்னாள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகர உயிருடன் இல்லை என சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க இதனை அறிவித்துள்ளார்.
தாஜூதீன் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுரசேனநாயக்கவின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார் எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
வாசிம் தாஜூதீனின் உடல் 2102 ம் ஆண்டு நாரஹன்பிட்டியில் எரியுண்ட கார் ஒன்றிற்குள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதலில் இது விபத்தினால் ஏற்பட்ட மரணம் என அறிவிக்கப்பட்டபோதிலும் பின்னர் இடம்பெற்ற விசாரணைகளின் போது இது கொலை என்பது தெரியவந்தது