தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சென்னை என்ஜினீயர் சுவாதி கொலையில், குற்றவாளி ராம்குமார் நேற்று முன்தினம் இரவு பிடிபட்டார்.நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே தன் சொந்த கிராமமான மீனாட்சிபுரத்தில் பதுங்கி இருந்த அவரை போலீசார் பிடித்தனர்.
போலீசாரை கண்டதும் கொலையாளி ராம்குமார் தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அவருக்கு நெல்லை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கழுத்தில் அவனுக்கு 18 தையல் போடப்பட்டுள்ளது. தற்போது அவர் பழைய நிலைக்கு வந்துள்ளார். இதனால் அவரை நேற்று தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மற்றொரு அறைக்கு மாற்றினார்கள்.இந்நிலையில் இன்று மதியம் நெல்லை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ், ராம்குமார் சிகிச்சை பெற்றுவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நேரடியாக சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் ராம்குமாரை சென்னை கொண்டு செல்ல போலீசாருக்கு நீதிபதி ஒப்புதல் அளித்தார். இதனை அடுத்து ராம்குமாரை சென்னை கொண்ட வர ஏற்பாடுகள் மேற்கொள்ப்பட்டு வருகிறது.
இதற்காக 108 ஆம்புலன்சு வாகனம் ஒன்று டிரைவர் மற்றும் உதவியாளருடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ராம்குமாருடன் செல்ல காது, மூக்கு, தொண்டை மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் இருக்கிறார்கள்.
இன்னும் ஒருமணி நேரத்தில் 108 ஆம்புலன்சு பாளையங்கோட்டியில் இருந்து கிளம்பும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னையில் ராம்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எந்த மருத்துவமனையில் அவர் சேர்க்கப்படுவார் என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை. ராம்குமார் நாளை காலை சென்னை எழும்பூர் குற்றவியல் பெருநகர நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.