பிரிட்டனில் பொதுவாக்கெடுப்பு தொடர்பான பிரச்சாரத்தின்போது தொழிலாளர் கட்சியின் பெண் எம்.பி.யை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என அங்கு கோரிக்கைகள் எழுந்தன. இது பல்வேறு மட்டங்களில் இருந்தும் நாளுக்கு நாள் வலுப்பெற்றதால், இது தொடர்பாக நாட்டு மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தும் நிலைக்கு சென்றது. இந்த வாக்கெடுப்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகவேண்டும் என்பதை ஆதரித்து பெரும்பான்மையான மக்கள் வாக்களித்தனர். இதனால், பிரிட்டன் விலகுவது உறுதியானது.
இதற்கான நடைமுறைகள் தொடங்கி உள்ள நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பான பிரச்சாரத்தின்போது தொழிலாளர் கட்சி எம்.பி.யான ஜோ காக்ஸ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன், அதாவது ஜூன் 16-ம்தேதி ஜோ காக்ஸ் அவரது அலுவலகத்திற்கு வெளியே நின்றிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடலில் கொலையாளி கத்தியால் குத்தியும் காயப்படுத்தியிருந்தான்.
இதுதொடர்பாக தீவிர வலதுசாரி கொள்கை கொண்ட தாமஸ் மாயிர் (53) என்பவர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் முடிவில் தாமஸ் மாயிர் மீதான கொலைக் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.