எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மச்சில் செக்டாரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இதில் ஒருவரது உடல் சிதைக்கப்பட்டு இருந்ததாக செய்திகள் வெளியானது. இந்த தகவலை பாகிஸ்தான் ராணுவம் மறுத்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள பாகிஸ்தான் நிலைகளின்மீது இந்திய வீரர்கள் இன்று காலையில் இருந்து கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். இந்த தாக்குதலில் தங்கள் தரப்பில் 3 வீரர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்திருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்தது.
இதனால் இருநாடுகளிடையே எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.
ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளதாக இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் ராணுவ பிரிவு தெரிவித்துள்ளது.