அமெரிக்காவில் ‘ஜியோபார்டி டீன் டோர்னமென்ட்’ என்ற பெயரில் டெலிவிஷனில் ஆண்டுதோறும் நடத்துகிற வினாடி வினா போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் சுமார் ரூ.67 லட்சம் வென்றார்.அமெரிக்காவில் ‘ஜியோபார்டி டீன் டோர்னமென்ட்’ என்ற பெயரில் டெலிவிஷனில் ஆண்டுதோறும் நடத்துகிற வினாடி வினா நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்த போட்டியில் மேடிசன் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளி மாணவர் சரத் நாராயண் கலந்து கொண்டார்.
அவர் இறுதிப்போட்டியில் தனக்கு அடுத்த படியாக வந்த அலெக்ஸ் பிஸ்தால், மைக்கேல் போரெக்கி ஆகியோரை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம் 1 லட்சம் டாலர் (சுமார் ரூ.67 லட்சம்) பரிசை அவர் பெற்றார். இந்த போட்டியை வாரம் தோறும் 2 கோடியே 30 லட்சம் பேர் டெலிவிஷனில் கண்டு களித்தனர்.
இரண்டாம் இடத்தை அலெக்ஸ் பிஸ்தாலும், மூன்றாவது இடத்தை மைக்கேல் போரெக்கியும் கைப்பற்றினர்.
இந்த வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சரத் நாராயண், “நான் எனது குடும்பத்தினருடன் ஐரோப்பா செல்ல விரும்புகிறேன். இத்தாலி அல்லது ஜெர்மனிக்கு செல்லக்கூடும். இதில் பெரும்தொகை வரிக்கும், கல்லூரி டியூசன் கட்டணத்துக்கும் போய் விடும். இந்த பரிசை பெற்றதால் எனக்கு புதிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. என்னை நான் ஆனந்த அதிர்ச்சிக்கு உட்படுத்த முடியும் என புரிந்து கொண்டேன்” என்று கூறினார்.