ஒன்றல்ல நூறல்ல ஆயிரம் பொலிஸார் வந்தாலும் எம்மை அடக்க முடியாது, அந்த எண்ணத்தை கைவிட்டு விடுங்கள் என ஞானசார தேரர் தெரிவித்தார்.இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
தொடர்ந்தும் அவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,1980ஆம் ஆண்டுகளில் விடுதலைப்புலிகளை சிறிய குழுவாக பிரபாகரன் உருவாக்கினார். அது காலப்போக்கில் மிகப்பெரிதாக வளர்ந்து விட்டது.அப்போது விடுதலைப்புலிகள் உருவாகும் போது யாரும் தடுக்கவில்லை அப்போதைய ஆட்சியாளர்களின் கவனயீனத்தினால் பிரபாகரனும், விடுதலைப்புலிகளும் வளர்ந்தார்கள்.
பின்னர் அவர்கள் அழிக்கப்பட்டனர், ஆனாலும் 30 வருடங்கள் இரத்தம் கொட்டியது புலிகளை அழிக்கப்பட்ட பின்னரும் நாடு பின்னோக்கி பயணித்தது.அந்த நிலைதான் தற்போது உருவாகியுள்ளது. முஸ்லிம் இனத்தவருக்கு நாடு செல்லும் அபாய நிலை ஏற்பட்டு விட்டது அவற்றை தடுக்காது விட்டால் மீண்டும் இலங்கையில் இரத்தங்களை நனைக்க வேண்டிய நிலை உருவாகிவிடும்.
இப்போதைய சக்தி இல்லாத ஆட்சியாளர்கள் முஸ்லிம்களுக்கு நாடு செல்வது தொடர்பில் கவனம் எடுக்கவில்லை, ஆனால் இனவாதங்களை பரப்புகின்றவர்களாக எம்மை சித்தரித்து கைது செய்ய சதி செய்கின்றார்கள்.ஒன்றல்ல நூறல்ல ஆயிரம் பொலிஸார்களை கொண்டு வந்தாலும் அது நடக்காத காரியம் என்பதனை அரசு நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
சிங்களவர்களுக்கு என்ன பாதிப்பு நடந்துள்ளது என்பது தொடர்பில் அரசு தெரிந்து கொண்டு விரைவாக பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வினை வழங்க முன்வர வேண்டும்.இதனை விடுத்து கைது செய்வோம் என எச்சரிக்கை விடுக்க வேண்டாம் அது நடக்கவும் நடக்காது, அதற்கான ஆயத்தங்களையும் செய்துள்ளோம். சிங்கள இனத்தை காக்க வெள்ளம் போன்று இளைஞர்கள் முன்வந்துள்ளார்கள் அதனை சுனாமியாக மாற்றி விட வேண்டாம்.
இனியும் பேசிக்கொண்டிருந்தால் சரிப்பட்டு வராது திருப்பி அடிக்க வேண்டும் என்ற மனநிலை அனைவரிடமும் தற்போது ஏற்பட்டு விட்டது.எனவே அரசு உடனடியாக இவை தொடர்பில் கவனத்தில் எடுக்கவேண்டும் எனவும் ஞானசார தேரர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.