வடக்கு மாகாண சபைக்குள் இடம்பெறும் செயற்பாடுகள் எவையும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படுவதில்லையெனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்களே வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமையில்லை என பொதுமக்கள் தெரிவிப்பதற்கான முக்கிய காரணம் என வடக்கு மாகாணசபையின் வவுனியா மாவட்ட உறுப்பினர் ம. தியாகராஜா தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையால் வவுனியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் தொடர்பாக விளக்கமளிக்கையில்,
மாகாணசபை அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கையாள்வதில் நெருக்கடி நிலமைகள் ஏற்பட்டால் அவற்றை மாகாணசபை உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணசபை அமைச்சர்கள் மாகாண சபை உறுப்பினர்களுக்கு அதனைப் பகிர்ந்தளிப்பதில்லை.
எனினும் திரும்பிச் செல்லும் குறித்த நிதியை மாகாணசபை உறுப்பினர்களிடம் கையளிக்கும்போது, ஒவ்வொரு மாவட்டங்களிலும் நிவர்த்தி செய்யப்படாதுள்ள குறைபாடுகளை அதன்மூலம் நிவர்த்தி செய்யலாம் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
அது மாத்திரமின்றி அவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் பட்சத்தில் குறித்த நிதியானது நேர்மையாகவும் நிதானமாகவும் மக்களைச் சென்றடையும் எனவும் சுட்டிக்காட்டினார்.