பஷில் வெளிநாடு செல்வதற்கு பொலிஸ்  நிதி மோசடி விசாரணை பிரிவின் கண்காணிப்பு அறிக்கை அவசியம் – மேல் நீதிமன்றம்

324 0

download-1வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கை தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவின் கண்காணிப்பு அறிக்கை பெற்றுக் கொள்ளப்பட வேண்டியது அவசியம் என சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.

திவிநெகும திணைக்களத்தின் நிதி மோசடியான முறையில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான இரண்டு வழங்கு விசாரணைகள் நடாத்தப்பட்டு வருகின்ற நிலையில், முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸவிற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்த நிலையிலேயே தனக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு பஷில் ராஜபக்ஸ நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்.

இந்த கோரிக்கை குறித்து சட்டமா அதிபர் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதன்படி, இந்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 2ஆம் திகதி வரை ஒத்தி வைக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசலா வீரவர்தன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன், முன்னாள் அமைச்சர் வெளிநாடு செல்வது தொடர்பிலான ஆட்சேபனைகள் காணப்படும் பட்சத்தில், எதிர்வரும் இரண்டாம் திகதி அதனை  முன்வைக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தனக்கு மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக் கொள்வதற்காக டிசம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை அமெரிக்க செல்ல  வேண்டியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அதனால் தனக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயண தடையை நீக்குமாறும் அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது,