மட்டக்களப்பில் வீதி விபத்து மூவர் படுகாயம்

316 0

downloadமட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற விபத்தில் இரு மாணவர்கள் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊறணிப்பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இரண்டு மாணவர்கள் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு ஊறணி சந்திப் பகுதியில் வீதியை கடக்க முனைந்த மோட்டார் சைக்கிள் மீது கன்டர் வாகனம் மோதியதன் காரணமாக மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மூவரும் படுகாயமடைந்துள்ளனர்.

பொலநறுவையில் இருந்து வந்த கன்டர் ரக வாகனமே மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த பகுதியில் பதற்றம் நிலவியதுடன் அப்பகுதிக்கு வந்த போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

காயமடைந்த மூவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விபத்தின்போது இருதயபுரத்தை சேர்ந்த 52 வயதுடைய என்.மயூரன், அவரது மகனான 12 வயதுடைய ம.அபிரஞ்சிதன் மற்றும் சகோதரியின் மகனான 12 வயதுடைய எஸ்.தர்சானந்த் ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தினை ஏற்படுத்திய சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப்  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது அங்கு ஒன்றுகூடிய மக்கள் முறையான விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் எனவும், அப்போதே வாகனத்தை கொண்டுசெல்வோம் என்று வாகனத்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்வதை தடுத்தனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி, சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என வாக்குறுதி வழங்கியதையடுத்து, பொதுமக்கள் வாகனத்தை பொலிஸார் கொண்டு செல்ல அனுமதித்தனர்.

குறித்த கன்டர் வாகன சாரதி, சாரதி அனுமதிப்பத்திரம் இன்றியே வாகனத்தை செலுத்திவந்ததாகவும் சம்பவத்தின்போது பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனம் செலுத்தும்போது வருடாந்த வாகன பதிவு சான்றிதழ் வாகனத்தின் முன்பக்கத்தில் காட்சிப்படுத்தவேண்டிய கட்டாயம் உள்ளபோதிலும், குறித்த வாகனத்தில் அந்த சான்றிதழ் காட்சிப்படுத்தப்படவில்லையெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.