தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் யாழ்ப்பாணம் தீவகம் ஊர்காவற்றுறையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்குச் சென்றபோது ஈ.பி.டி.பியினரால் தாக்கக்கப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நான்காம் நாளாக விசாரணைக்காக யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இன்றையதினம் சாட்சியம் அளிக்கப்பட வேண்டிய சட்சி ஒருவர் இயற்கை மரணம் அடைந்த காரணத்தினால் வழக்கு விசாரணை நாளையதினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு தீவகம் ஊர்காவற்றுறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தல் பிரசாரத்திற்குச் சென்ற வேளை தாக்குதல் நடாத்தப்பட்டு இருவரை கொலை செய்யப்பட்டு, 21 பேர் காயமடைந்த வழக்கு தொடர்ச்சியாக யாழ்ப்பாண நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
இன்றையதினம் அரச தரப்பு சட்டத்தரணி நாகராசா நிசாந்தன் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் சந்தேக நபர்கள் மீது 47 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக மன்றில் தெரிவித்தார்.
ஊர்காவற்றுறையில் 28.11.2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த இருவராகிய ஏரம்பு பேரம்பலம் மற்றும் கமல் ஆகியோர் தாக்கி கொலை செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த வழக்கில் கொலை செய்தமை மற்றும் காயம் விளைவித்தமை தொடர்பில் 23 குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தினால் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவத்தைக் கண்ணால் கண்ட சாட்சியங்களான மாவை.சேனாதிராசா, எம்.கே.சிவாஜிலிங்கம், விந்தன் கனகரட்ணம் மற்றும் அன்ரன் யோகானந்தம் ஆகியோர் பதிவு செய்யப்பட்டுள்ளமை குற்றிப்பிடத்தக்கது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள முதலாம் சந்தேகநபர் நெப்போலியன் என்றழைக்கப்படும் ரமேஸ் இரண்டாம் சந்தேகநபர் செபஸ்ரியன், மதன் என்றழைக்கப்படும் நடராசா மதனராசா ஆகியோர் வெளிநாட்டிற்கு தப்பி நிலையில் மூன்றாம், நான்காம் சந்தேகநபர்களாகிய அன்ரன் ஜீவராசா, நவசிவாயம் கருணாகரமூர்த்தி ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
சந்தேகநபர்கள் சார்பில் தரப்பில் சட்டத்தரணி முடியப்பு.றெமீடியஸ், சுகன்யா, மற்றும் சியானி ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.