பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பேரணியானது இன்று (புதன்கிழமை) காலை கொள்ளுப்பிட்டியில் ஆரம்பித்து தற்போது ஜனாதிபதிச் செயலகம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது.
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பெறப்பட்ட கையொப்பங்களை பேரணியூடாகச் சென்று ஜனாதிபதியிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும், இதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் தாம் சர்வதேச ரீதியில் போராட்டத்தை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும், கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், அவர்களது விடுதலையானது தொடர்ச்சியாக இழுத்தடிக்கப்பட்டுவருகின்ற நிலையில், சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன இதில் நேரடியாகத் தலையிட்டு அரசியல் கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யவேண்டுமென கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.